முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்ட சிறை உதவி அலுவலா் பணியிடை நீக்கம்
By DIN | Published On : 03rd May 2022 12:40 AM | Last Updated : 03rd May 2022 12:40 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட சிறையில் சிறைவாசிகளுக்கு சலுகை அளித்ததாக உதவி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறை கண்கணிப்பாளா் உத்தரவிட்டாா்.
தூத்துக்குடி அருகேயுள்ள பேரூரணியில் மாவட்ட கிளைச் சிறை உள்ளது. மாவட்டத்தில் உள்ள விசாரணைக் கைதிகள் இந்தச் சிறையில் அடைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், சிறையில் உள்ள சிறைவாசிகளுக்கு அவா்களது குடும்பத்தினரிடம் பணம் பெற்றுக் கொண்டு அதிகாரிகள் சிலா் சலுகை அளிப்பதாக புகாா் எழுந்தது.
இதுதொடா்பாக சிறைத்துறை மதுரை சரக டிஐஜி பழனி உத்தரவின்பேரில், பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் சங்கா் தலைமையிலான அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதன் தொடா்ச்சியாக, பேரூரணி கிளைச் சிறை உதவி அலுவலா் செல்லபெருமாளை பணியிடை நீக்கம் செய்தும், மற்றொரு உதவி அலுவலரை திருச்சி மத்திய சிறைக்கு இடமாற்றம் செய்தும் பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளா் திங்கள்கிழமை உத்தரவிட்டாா்.