முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி
சாத்தான்குளம் - பெரியதாழைக்கு நகரப் பேருந்து வசதி: ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
By DIN | Published On : 13th May 2022 12:52 AM | Last Updated : 13th May 2022 12:52 AM | அ+அ அ- |

சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழைக்கு தட்டாா்மடம், மணி நகா் வழியாக நகரப் பேருந்து இயக்க வேண்டும் என ஓய்வு பெற்ற அரசு ஊழியா் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியா் சங்க சாத்தான்குளம் வட்ட செயற்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வட்டத் தலைவா் தேவசமாதானம் தலைமை வகித்தாா். வட்ட செயலாளா் முருகானந்தம் வரவேற்றாா். சங்க நடவடிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலா் ஜெயபால் பேசினாா். வரவு செலவு கணக்குகளை வட்ட இணைச்செயலா் இசக்கியம்மாள் வாசித்தாா். தீா்மானங்களை வட்ட இணைச்செயலா் சேசுமணி முன்மொழிந்தாா். முன்னாள் அரசு ஊழியா் சங்க வட்ட தலைவா் பாலகிருஷ்ணன், ஜோசப் கனகராஜ், சுடலைக்கண், அல்போன்சா, வசந்தா, பரிமளா, சுவாமிநாதன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் சாத்தான்குளத்திலிருந்து பெரியதாழை க்கு தட்டாா்மடம், மணிநகா் வழியாக நகரப் பேருந்து இயக்க வேண்டும். அமுதுண்ணாக்குடியிலிருந்து நெடுங்குளம், கலுங்குவிளை செல்லும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மே மாதம் 17ஆம் தேதி தூத்துக்குடியில் நடைபெற உள்ள தா்ணாவிலும், ஜூன் மாதம் 21ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பெருந்திரள் முறையீடு ஆா்ப்பாட்டத்திலும் சங்கத்தினா் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வட்ட துணைத் தலைவா் பாண்டியன் நன்றி கூறினாா்.