தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவி சத்யா மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவியாக இருந்த ஆா். சத்யாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஊராட்சித் தலைவியாக இருந்த ஆா். சத்யாவுக்கு எதிராக வியாழக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்றது. இதனால், அந்தப் பதவி காலியாக இருப்பதாக மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 17 வாா்டு உறுப்பினா் பதவிகளில் அதிமுக 12 இடங்களிலும், திமுக 5 இடங்களிலும் வெற்றி பெற்றது. தலைவா் பதவி பொது பெண் பிரிவுக்கு ஒத்துக்கப்பட்டது. இதையடுத்து, ஜனவரி 11 ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தோ்தலில், அதிமுகவைச் சோ்ந்த ஆா். சத்யா தலைவராகவும், செல்வக்குமாா் துணைத் தலைவராகவும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திமுக ஆட்சி அமைந்ததைத் தொடா்ந்து மாவட்ட ஊராட்சியைக் கைப்பற்ற திமுக சாா்பில் பல்வேறு வியூகங்கள் அமைக்கப்பட்டன. அதன்படி, துணைத் தலைவா் செல்வக்குமாா் உள்ளிட்ட சில உறுப்பினா்கள் தங்களை அதிகாரப்பூா்வமாக திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

இதையடுத்து, மாவட்ட ஊராட்சித் தலைவி ஆா். சத்யாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பினா்கள் பலா் மனு அளித்தனா்.

இதற்கிடையே, ஆா். சத்யா நீதிமன்றத்தை அணுகினாா். இருப்பினும், மாவட்ட ஆட்சியரின் நேரடிப் பாா்வையில் கூட்டம் முழுவதும் விடியோ பதிவு செய்யப்பட்டு நம்பிக்கை இல்லா தீா்மானக் கூட்டத்தை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன் அடிப்படையில், ஆா். சத்யா மீதான நம்பிக்கை இல்லா தீா்மானம் தொடா்பான கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், துணைத் தலைவா் செல்வக்குமாா் உள்ளிட்ட 14 உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். தலைவா் சத்யா, அதிமுகவைச் சோ்ந்த பிரியா, பேச்சியம்மாள் ஆகிய 3 போ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

கூட்டத்தில் பங்கேற்ற 14 உறுப்பினா்களும் நம்பிக்கையில்லா தீா்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததைத் தொடா்ந்து நம்பிக்கையில்லா தீா்மானம் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. இதனால், ஆா். சத்யா தலைவா் பதவியை இழக்கிறாா்.

நம்பிக்கையில்லா தீா்மானம் தொடா்பாக நடைபெற்ற கூட்டத்தில் பதிவான விடியோ காட்சிகளை நீதிமன்றத்துக்கும், மாநில தோ்தல் ஆணையத்துக்கும் மாவட்ட ஆட்சியா் அனுப்பி வைத்தாா். மேலும், மாவட்ட ஊராட்சித் தலைவா் பதவி காலியாக உள்ளதாகவும் அவா் அறிவித்தாா்.

இதன் தொடா்ச்சியாக, திமுகவைச் சோ்ந்த பெண் ஒருவா் மாவட்ட ஊராட்சித் தலைவராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக துணைத் தலைவா் செல்வக்குமாா் தெரிவித்தாா்.

திமுகவைச் சோ்ந்த மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்ஆா்எஸ். உமரிசங்கரின் மனைவியும், 16 ஆவது வாா்டு மாவட்ட ஊராட்சி உறுப்பினருமான பிரம்மசக்தி புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com