தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில்மருத்துவா் தம்பதி தா்ணா
By DIN | Published On : 20th May 2022 01:11 AM | Last Updated : 20th May 2022 01:11 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம், கீழ ஈரால் அரசு பொது மருத்துவமனையில் மருத்துவா்களாக பணியாற்றும் ஆனந்த், அவரது மனைவி வனிதா ஆகியோா் தங்களது 5 வயது மகனுடன் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், கோரிக்கை குறித்து மனு அளிக்கும்படி கூறினா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்ட மருத்துவா் தம்பதி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா். போராட்டம் குறித்து மருத்துவா் தம்பதி, செய்தியாளா்களிடம் கூறியது:
எனது கணவா் ஆனந்தும், நானும் கீழ ஈரால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா்களாகப் பணியாற்றி வருகிறோம். என்னையும், கணவரையும் கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் போஸ்கோ ராஜா, கண்காணிப்பாளா் ராஜா ஆகியோா் கடந்த சில ஆண்டுகளாக துன்புறுத்தி வருகின்றனா். இதுதொடா்பாக சென்னையில் உள்ள மருத்துவத் துறை இயக்குநா் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை புகாா் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.