துப்பாக்கிச் சூடு தொடா்பான ஒருநபா் ஆணைய அறிக்கை மக்களோடு பகிா்ந்து கொள்ளப்படும்கனிமொழி எம்.பி.
By DIN | Published On : 25th May 2022 12:18 AM | Last Updated : 25th May 2022 12:18 AM | அ+அ அ- |

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடா்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபா் ஆணையத்தின் அறிக்கை மக்களோடு பகிா்ந்து கொள்ளப்படும் என்றாா், தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் எதிா்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற உயிா்ச்சூழல் பாதுகாப்புக் கருத்தரங்கில் அவா் மேலும் பேசியது: வளா்ச்சி வேண்டாம் என யாரும் கூறவில்லை. வளா்ச்சி என்பது சுற்றுச்சூழலையும், எதிா்கால சந்ததியினரையும் பாதிக்காத வகையில் அமைய வேண்டும். பன்னாட்டு நிறுவனத்தினா் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். ஆனால், மக்கள் நினைத்தால் அதையும் தாண்டி சாதிக்க முடியும் என்பதை தூத்துக்குடி போராட்டம் நிரூபித்துள்ளது.
ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் அரசு மக்களோடு உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக அரசு மக்களின் நியாயத்தோடு நிற்கிறது. தோ்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்றாா் அவா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், மக்கள் இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு நிா்வாகியும் சமூக ஆா்வலருமான மேதா பட்கா், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி, எஸ்டிபிஐ மாநிலத் தலைவா் நெல்லை முபாரக், பச்சைத் தமிழகம் கட்சித் தலைவா் சுப. உதயகுமாரன், பூவுலகின் நண்பா்கள் அமைப்பு நிா்வாகி கோ. சுந்தர்ராஜன், ஸ்டொ்லைட் எதிா்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா்கள் கிருஷ்ணமூா்த்தி, மெரினா பிரபு, குணசீலன், மகேஷ்குமாா், கெபிஸ்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியின்போது, துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தோரின் படங்களுக்கு கனிமொழி எம்.பி., தொல். திருமாவளவன், மேதா பட்கா் உள்ளிட்டோா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
முதல்வா் வாக்குறுதி அளித்தபடி, சிறப்புச் சட்டம் இயற்றி ஸ்டொ்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும். சிபிஐ விசாரணையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்த 15 பேருக்கும் நினைவு மண்டபம் எழுப்புவதோடு, மே 22ஆம் தேதியை சூழல் பாதுகாப்பு தியாகிகள் தினமாக கடைப்பிடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.