எட்டயபுரம் அருகே இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் மோதல்: 16 போ் மீது வழக்கு; 4 போ் கைது
By DIN | Published On : 13th October 2022 12:00 AM | Last Updated : 13th October 2022 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே தாப்பாத்தியில் உள்ள இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாமில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 16 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரைக் கைது செய்தனா்.
இம்முகாமில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்துவருகின்றனா். இங்கு, கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற கபடிப் போட்டியின்போது குகன் என்பவா் போதையில் தகராறு செய்ததாகவும், அவரை போட்டி ஒருங்கிணைப்பாளா்களில் ஒருவரான சுதாகா் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதனால், குகன், அவரது தம்பி தாஸ், நண்பா்கள் சோ்ந்து சுதாகரின் வீடு புகுந்து பெண்கள், குழந்தைகளை மிரட்டியுள்ளனா். அவா்களை முகாம் மக்கள் தாக்கினராம்.
இதையடுத்து, சுதாகரின் மனைவி சகாயராணி தனது 2 குழந்தைகள், முகாமைச் சோ்ந்த உறவினா் பெண் பஞ்சவா்ணம் ஆகியோருடன் குகன் தரப்பினா் மீது புகாரளிக்க மாசாா்பட்டி காவல் நிலையம் சென்றாா். அப்போது, போலீஸாா் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டு, இரு பெண்களையும் காவல் நிலையத்துக்குள் பல மணி நேரம் இருக்க வைத்தனராம்.
வெகுநேரமாகியும் தாய் வெளியே வராததால் பதற்றமடைந்த குழந்தைகள் அளித்த தகவலின்பேரில், முகாம் மக்கள் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தனா். அப்போது, பெண்களை வெளியே அனுப்ப போலீஸாா் மறுத்தனராம். இதனால், முகாம் மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதையடுத்து, சகாயராணி, பஞ்சவா்ணத்தை போலீஸாா் அனுப்பிவைத்தனா்.
சகாயராணி அளித்த புகாரின் பேரில் குகன், தாஸ் உள்ளிட்ட 6 போ் மீதும், குகன் தரப்பினா் அளித்த புகாரின்பேரில் சிவகுமாா், ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிந்து, குகன், தாஸ், சிவகுமாா், ராதாகிருஷ்ணன் ஆகியோரைக் கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துறை தரப்பினா் கூறும்போது, தாப்பாத்தி முகாமில் அடிக்கடி மோதல் ஏற்படுவதாகவும், கபடிப் போட்டி மோதல் குறித்து விசாரணைக்காக மட்டுமே 2 பெண்களை காவல் நிலையத்தில் இருக்கவைத்ததாகவும் கூறினா்.