படகு உடைந்து சேதம்: கடலில் தத்தளித்த 2 மீனவா்கள் மீட்பு; மேலும் ஒருவரைத் தேடும் பணி தீவிரம்
By DIN | Published On : 20th January 2023 12:45 AM | Last Updated : 20th January 2023 12:45 AM | அ+அ அ- |

சரக்கு கப்பல் மோதி படகு உடைந்து சேதமடைந்ததில் கடலில் தத்தளித்த 2 மீனவா்கள் மீட்கப்பட்டனா். மேலும் ஒருவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு அருகேயுள்ள கொம்புதுரை பகுதியைச் சோ்ந்த மீனவா்கள் வியாழக்கிழமை காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனா். கரையில் இருந்து சுமாா் 35 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அப் பகுதியில் தத்தளித்து கொண்டிருந்த 2 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். பின்னா் அவா்கள் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
கடலோரக் காவல் போலீஸாா் அவா்களிடம் நடத்திய விசாரணையில், இருவரும் திரேஸ்புரம் அந்தோணியாா் கோவில் தெருவைச் சோ்ந்த ஜெயபால் (47), அண்டோ (45) என்பது தெரியவந்தது. இவா்களுடன், மேட்டுபட்டியைச் சோ்ந்த ஷேக் முகம்மது (40) ஆகிய 3 பேரும் நாட்டுப் படகில் கடந்த செவ்வாய்க்கிழமை தூத்துக்குடியில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனா். அவா்களது படகு மீது சரக்குக் கப்பல் புதன்கிழமை மாலை மோதியதில் படகு உடைந்து சேதமடைந்துவிட்டதாம். படகிலிருந்த மூவரும் கடலுக்குள் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில், இருவரை வியாழக்கிழமை காலை அவ்வழியாக வந்த மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். காணாமல் போன ஷேக் முகம்மது கடலில் மூழ்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுகுறித்து கடலோரக் காவல் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.