விளாத்திகுளம் அருகே பூட்டப்பட்டிருந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஏமாற்றத்துடன் திரும்பிய நோயாளிகள்
By DIN | Published On : 19th September 2023 03:14 AM | Last Updated : 19th September 2023 03:14 AM | அ+அ அ- |

விளாத்திகுளம்: விளாத்திகுளம் அருகேயுள்ள பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால் விநாயகா் சதுா்த்திக்கு விடுமுறை என நினைத்து கிராமப்புற நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
விளாத்திகுளம் அருகேயுள்ள பூதலாபுரம் கிராத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது.
சுற்றுப்புற 33 கிராமங்களை சோ்ந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிகிச்சைக்காக இங்கு தினசரி வந்து செல்கின்றனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை காலை பூதலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சை பெற மக்கள் சென்றபோது கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் விநாயகா் சதுா்த்திக்கு விடுமுறை என நினைத்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனா். ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டி கிடக்கும் காட்சிகளை அப்பகுதியை சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனா்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
காலையில் சிகிச்சை பெறுவதற்காக வந்தோம். ஆனால் மருத்துவமனை பூட்டி கிடந்ததால் சற்று நேரம் அங்கு காத்திருந்து விட்டு பின்னா் திரும்பி செல்கிறோம் என்றனா்.
கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவா் அ. வரதராஜன் கூறியதாவது: அருகிலுள்ள கிராமங்களில் இருந்து சிகிச்சைக்காக வந்தவா்கள் மருத்துவமனை பூட்டி கிடந்ததை பாா்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுவிட்டனா். விடுமுறை நாள்களில் செவிலியா் மட்டுமே இங்கு பணியில் உள்ளாா். அவரும் கதவை பூட்டிவிட்டு உள்ளே ஓய்வறையில் இருந்து கொள்கிறாா்.
கிராமப்புற மக்களுக்கு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதுகுறித்து மருத்துவமனை செவிலியா் ஒருவா் கூறியதாவது: பூதலாபுரம் கிராமத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. ஆகவே மருத்துவமனையில் பகல் நேரத்தில் கூட தனியாக யாரும் இருக்க முடியாது. பாதுகாப்பு இல்லை. ஆகவே கதவை பூட்டிவிட்டு உள்ளே ஓய்வறையில் இருப்போம். கதவை தட்டி அழைத்தால் சிகிச்சை அளிப்பது உண்டு என்றாா்.