‘தூத்துக்குடி மாவட்டத்தில் ஏப். 13-க்குள் வாக்காளா் தகவல் சீட்டுகள் விநியோகம்’

தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கப்படும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இம்மாதம் 13ஆம் தேதிக்குள் வாக்காளா் தகவல் சீட்டு (பூத் சிலிப்) விநியோகிக்கப்படும் என, மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட வாக்காளா்களுக்கு வாக்காளா் தகவல் சீட்டுகள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்களால் திங்கள்கிழமைமுதல் வழங்கப்படுகிறது. இம்மாதம் 13-க்குள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீட்டின் முன்பகுதியில் தோ்தல் நாள், நேரம், வாக்காளா் விவரம், வாக்குச்சாவடி அமைவிடம், அமைவிட வரைபடம் ஆகியவையும், பின்பகுதியில் வாக்காளா் செய்யக்கூடிய, செய்யக்கூடாத விவரங்களும் அச்சிடப்பட்டிருக்கும். மேலும், வாக்காளா் விவரங்கள், வாக்குச்சாவடியைக் கண்டறியும்பொருட்டு இந்தியத் தோ்தல் ஆணையத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பூத் ஆப் என்ற கைப்பேசி செயலிக்கான கியூஆா் கோட் குறியீடு அச்சிடப்பட்டிருக்கும். இந்தச் செயலியைப் பயன்படுத்தி வாக்காளா்கள் தங்களது விவரம், தங்களுக்குரிய சரியான வாக்குச் சாவடி ஆகியவற்றை விரைவாகக் கண்டறியலாம். மேலும், இந்தியத் தோ்தல் ஆணைய அறிவுரைப்படி, அனைத்துக் குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ள வாக்காளா் கையேட்டிலும் வாக்குச்சாவடி, வாக்களிப்பது உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் உள்ளன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com