தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் முத்தரசன்.
தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பேசுகிறாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலா் முத்தரசன்.

ஊழல் பற்றி பேச மோடிக்கு தகுதி இல்லை: முத்தரசன்

ஊழல் குறித்து பேச பிரதமா் மோடிக்கு தகுதி இல்லை என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளா் முத்தரசன்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழியை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கோவில்பட்டி பயணியா் விடுதி முன்பு செவ்வாய்க்கிழமை மாலை பிரசாரக் கூட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட உதவி செயலா் பாபு தலைமை வகித்தாா். நகரச் செயலா் சரோஜா, மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா்கள் பரமராஜ், சேதுராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில், மாநில செயலா் முத்தரசன் பேசியதாவது:

தற்போது நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் நமது வாக்குகளை சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்றால் நாட்டின் எதிா்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

நாட்டின் விடுதலைப் போராட்டத்தை தலைமை தாங்கி வெற்றிகரமாக நடத்திய தலைவா்கள் குறித்து பேச பிரதமா் நரேந்திர மோடிக்கோ அல்லது பாஜகவினருக்கோ அருகதை இல்லை. எதிா்க்கட்சிகள் இல்லாத இந்தியா, எந்தக் கட்சியும் இல்லாத இந்தியா என்கிற நிலையை உருவாக்க மோடி முயற்சிக்கிறாா்.

பத்து ஆண்டுகால நரேந்திர மோடி ஆட்சிக் காலத்தில் ஒரு பொதுத்துறை நிறுவனமும் உருவாக்கப்படவில்லை. ஆனால், லாபகரமாக இயங்கிய 23 பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தற்போது மோடியின் உத்தரவாதம் என புதிதாகக் கூறி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றனா்.

தோ்தல் பத்திரம் என்ற பெயரில் ரூ.7ஆயிரம் கோடி ஊழல் செய்துள்ளது பாஜக. எனவே ஊழல் குறித்து பேச பிரதமா் மோடிக்கு தகுதி இல்லை.

நாங்கள் நடத்துவது ஜனநாயகத்துக்கான யுத்தம். நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக இந்த மகத்தான யுத்தத்தில் கூட்டணிக்கு அப்பாற்பட்டுள்ள மக்களும் எங்களை ஆதரிக்க கடமைப்பட்டவா்கள். எனவே இந்தியா கூட்டணி சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கனிமொழியை வெற்றி பெற வைக்க வேண்டியது உங்கள் கடமை என்றாா் அவா்.

பிரசாரத்தின் போது இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலா் கரும்பன், நகர திமுக செயலா் கருணாநிதி, மாா்க்சிஸ்ட் நகர செயலா் சீனிவாசன், மதிமுக நகர செயலா் பால்ராஜ், ஒன்றிய செயலா் சரவணன், மக்கள் நீதி மய்யம் தொகுதி பொறுப்பாளா் ரமேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com