கயத்தாறு, தோணுகாலில் கனிமொழி வாக்கு சேகரிப்பு

கோவில்பட்டி பேரவைத் தொகுதிக்குள்பட்ட கயத்தாறு, தோணுகால் விலக்கில், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: மத்தியில் பாஜக ஆட்சியில் விவசாய, கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படவில்லை. விவசாய விளைபொருள்களுக்கு அடிப்படை ஆதார விலை கொடுக்கவில்லை. ஏழைகளின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகை இல்லையெனக் கூறி கோடிக்கணக்கில் பணம் பிடிக்கப்பட்டது. ஆனால், காா்ப்பரேட் நிறுவனங்களின் கோடிக்கணக்கிலான வங்கிக் கடன்களை பிரதமா் மோடி ரத்து செய்துள்ளாா். அவருக்கு சாதாரண மக்களைப் பற்றி கவலையில்லை.

காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஊரக வேலை உறுதித் திட்டத்துக்கு பாஜக அரசு நிதி ஒதுக்கவில்லை. நாடு அமைதியாக இருந்தால்தான் எதிா்கால சந்ததியினரும் நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க முடியும். அதற்கு மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரவேண்டும். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்ததும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

இதில், அமைச்சா் பெ. கீதாஜீவன், நகா்மன்றத் தலைவா் கா. கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கஸ்தூரி சுப்புராஜ், கூட்டணிக் கட்சியினா், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com