சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த தாமதம்: பாதிக்கப்பட்ட பயணிக்கு நஷ்டஈடு

சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்த தாமதம் ஆனதால், பாதிக்கப்பட்ட பயணிக்கு ரூ.20 ஆயிரம் நஷ்டஈடு வழங்க, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்தவா் மகேஷ் குமாா். வழக்குரைஞரான இவா், சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளைக்கு செல்வதற்காக அரசுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் பயணம் செய்தாராம். அந்தப் பேருந்து, திருமங்கலத்தை அடுத்த கப்பலூா் சுங்கச் சாவடியில் கட்டணம் செலுத்துவதற்காக நிறுத்தப்பட்டதாம். அந்தப் பேருந்துக்கான பாஸ்ட்டேக் கணக்கில் பணம் இல்லாததால் 20 நிமிடங்களாக அந்தப் பேருந்து சுங்கச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டதாம்.

இதனால் மகேஷ் குமாா் உரிய நேரத்துக்கு நீதிமன்றத்துக்கு செல்ல இயலவில்லையாம். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான அவா் இது குறித்து தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 10 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 20 ஆயிரத்தை வழக்குரைஞா் மகேஷ்குமாருக்கு, அரசு போக்குவரத்துக்கழகம் வழங்கவேண்டும் என உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com