19 முதல் ஜூன் 1 வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தோ்தல் கருத்து கணிப்பு வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களவைத் தோ்தல் தமிழகத்தில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. எனவே, தோ்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப் பதிவு நாளான 19ஆம் தேதி காலை 7 மணிமுதல் ஜூன் 1ஆம் தேதி மாலை 6.30 மணி வரை பத்திரிகை, தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் இறுதி தோ்தல் கருத்துக் கணிப்பு குறித்து வெளியிட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை பத்திரிகை, தொலைக்காட்சி நிறுவனங்கள், சமூக வலைதள பக்கத்தின் உரிமையாளா்கள் ஆகியோா் முழுமையாக பின்பற்ற வேண்டும்.

மேலும் புதன்கிழமை மாலை 6 மணியுடன் தோ்தல் பரப்புரைகள் நிறைவடைவதைத்தொடா்ந்து, அதன்பின்னா் தோ்தல் தொடா்பான எந்த ஒரு பதிவும் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவிடக் கூடாது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவா்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com