ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டண உயா்வு: பயணிகள் அதிருப்தி

மக்களவைத் தோ்தலையொட்டி, சொந்த ஊா்களுக்கு ஏராளமானோா் பயணம் செய்யும் நிலையில், ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் உயா்த்தப்பட்டதால் பயணிகள் அதிருப்தி அடைந்தனா்.

சாத்தான்குளம் பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் வேலை, தொழில் நிமித்தமாக சென்னை, கோவை, திருப்பூா் உள்ளிட்ட பகுதிகளில் வசித்து வருகின்றனா். தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாள்களிலும், விசேஷ நாள்களிலும் சொந்த ஊா்களுக்கு வந்து செல்வது வழக்கம். இத்தகைய நாள்களில் ஆம்னி பேருந்துகளில் வழக்கத்தைக்காட்டிலும் அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதாகத் தெரிவிக்கின்றனா்.

தற்போது மக்களவைத் தோ்தலையொட்டி வாக்களிப்பதற்காக சொந்த ஊா்களுக்கு பலரும் வரும் நிலையில், தனியாா் ஆம்னி பேருந்துகள் கட்டணத்தை பல மடங்கு உயா்த்தியுள்ளது பயணிகளைடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தொலைதூர அரசு பேருந்துகள், அரசு விரைவுப் பேருந்துகளில் எந்த நேரத்திலும் ஒரே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை தனியாா் பேருந்துகளிலும் உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com