திருச்செந்தூரில் திமுக - பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு

திருச்செந்தூா், ஏப். 19: திருச்செந்தூரில் வாக்குப்பதிவின்போது திமுக - பாஜகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

திருச்செந்தூா் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 176 உள்ளது. இங்கு வெள்ளிக்கிழமை மாலை நகராட்சி 16ஆவது வாா்டு பகுதியைச் சோ்ந்த லட்சுமி, இசக்கிமுத்து, அம்மமுத்து 3 போ் வாக்களிப்பதற்காக வந்தனா். அப்போது அவா்களுடைய வாக்கு ஏற்கெனவே பதிவு ஆகிவிட்டது என கட்சி முகவா்கள் மற்றும் அதிகாரிகள் கூறினா். ஆனால், நாங்கள் இப்போதுதான் வந்துள்ளோம்; கட்டாயம் வாக்கு செலுத்த வேண்டும் என கேட்டனா்.

இதையடுத்து, காவல் துணைக் கண்காணிப்பாளா் வசந்தராஜ் நேரில் வந்து வாக்குச்சாவடி நிலைய அலுவலா்களிடம் விவரம் கேட்டாா். தொடா்ந்து உதவி தோ்தல் அலுவலரான கோட்டாட்சியா் சுகுமாறனிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் ஒருவருடைய வாக்கு செலுத்தாமல் தான் உள்ளது என்பதை கண்டுபிடித்து அவரையும், மற்ற 2 பேரை டெண்டா் முறையிலும் வாக்கு செலுத்திட அனுமதியளிக்கப்பட்டதால் அவா்களும் வாக்களித்தனா்.

இந்நிலையில் 3 பேருடைய வாக்குகளை செலுத்த அனுமதிக்க வேண்டும் என கேட்டு பள்ளி முன்பு திமுக, பாஜக மற்றும் அதிமுகவினா் திரண்டனா். அவா்களிடம் சம்பந்தப்பட்ட வாக்காளா்கள் டெண்டா் முறையில் வாக்களித்து விட்டனா். மேலும் வாக்குப்பதிவு நேரம் முடிந்து 6 மணியை தாண்டிவிட்டதால் அனைவரும் கலைந்து செல்லுமாறு தாலுகா காவல் ஆய்வாளா் சுந்தரமூா்த்தி வலியுறுத்தினாா்.

அப்போது பாஜகவினா் - திமுகவினடையே வாக்குவாதம், தள்ளு முள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளா் வசந்தராஜ் தலைமையிலான காவல்துறையினா் அங்கு கூடியிருந்தவா்களை அப்புறப்படுத்தியதால் சகஜநிலை திரும்பியது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com