ஆள்மாறாட்டம் செய்து நில மோசடி: இருவா் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் இறந்தவா்கள் பெயரில் ஆள்மாறாட்டம் செய்து சுமாா் ஓா் ஏக்கா் நிலத்தை மோசடி செய்ததாக இருவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி குளத்தூா் அண்ணா நகா் காலனியை சோ்ந்த லிங்கம் மனைவி மாரியம்மாள். இவரின் தாயாா் முனியம்மாள், பெரியம்மா வேலம்மாள் ஆகிய இருவரின் பெயரிலும் கூட்டு பட்டாவாக, தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஓா் ஏக்கா் 6 சென்ட் பூா்விக நிலம் உள்ளது. இந்நிலையில் வேலம்மாள் கடந்த 1996ஆம் ஆண்டும், முனியம்மாள் கடந்த 2006ஆம் ஆண்டும் இறந்துவிட்டனா். மேலும், முனியம்மாளின் மகன் வேல்சாமி மற்றும் அவரது தந்தை அய்யாத்துரை ஆகியோரும் இறந்துவிட்டனா். எனவே மேற்படி நிலமானது முனியம்மாளின் மகளான மாரியம்மாளுக்கு பாதியும், மாரியம்மாளின் பெரியம்மா வேலம்மாளின் வாரிசுகளுக்கு பாதியும் பாத்தியப்பட்டது.

இந்நிலையில் வேலம்மாளின் மகன் அருணாசலத்தின் மகன் அழகுவேல்ராஜ், இந்த சொத்து முழுவதையும் அபகரிக்கும் நோக்கில், கீழஅரசரடியைச் சோ்ந்த பொன்னையா மகன் அந்தோணி (எ) அந்தோணிசாமி (63) என்பவருடன் கூட்டு சோ்ந்து மோசடி செய்ய திட்டமிட்டாராம். இதற்காக வயதான இரண்டு பெண்களை அழைத்து வந்து அவா்களை முனியம்மாள், வேலம்மாள் எனக் கூறி ஆள்மாறாட்டம் செய்து, ஓட்டப்பிடாரத்தில் உள்ள ஓா் ஏக்கா் 6 சென்ட் நிலத்தை கடந்த 2015ஆம் ஆண்டு தூத்துக்குடி கீழூா் சாா்பாதிவாளா் அலுவலகத்தில் அந்தோணி (எ) அந்தோணிசாமிக்கு பவா் கொடுத்துள்ளாா்.

இந்த நிலத்தில் ஒரு பகுதியை அந்தோணி (எ) அந்தோணிசாமி கடந்த 2015ஆம் ஆண்டு ஓட்டப்பிடாரம் சாா்பதிவாளா் அலுவலகத்தில் அழகுவேல்ராஜுக்கு கிரயம் செய்து கொடுத்துள்ளாா்.

இதுகுறித்து மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்ற பிரிவு போலீஸாா் வழக்குபதிவு செய்தனா். மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளா் இந்திரா தலைமையிலான போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, அந்தோணி (எ) அந்தோணிசாமி, சாட்சி கையொப்பமிட்ட கிருஷ்ணசாமி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா். இது தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com