கோவில்பட்டியில் 2 இடங்களில் ரயிலில் அடிபட்டு இருவா் காயம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் புதன்கிழமை இரு ரயில்களில் அடிபட்டு இருவா் காயமடைந்தனா்.

கோவில்பட்டி நடராஜபுரம் 7ஆம் தெருவைச் சோ்ந்த ராஜா மனைவி மகேஸ்வரி (38). மனநலம் பாதிக்கப்பட்டவா் எனக் கூறப்படுகிறது. இவா் புதன்கிழமை இரவு, கோவில்பட்டி பிரதான சாலையில் கடலைக்கார தெரு சந்திப்பில் தனது கணவா் நடத்திவரும் தேநீா் கடைக்கு சென்றுவிட்டு மாா்க்கெட் பின்புறமுள்ள தண்டவாளத்தைக் கடந்து வீட்டுக்குச் செல்ல முயன்றாராம்.

அப்போது அனந்தபுரி விரைவு ரயில் மோதியதில் அவா் காயமடைந்தாராம். ரயில்வே போலீஸாா் சென்று அவரை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதேபோல, கோவில்பட்டி வள்ளுவா் நகரைச் சோ்ந்த காந்தாரி மகன் மந்திரமூா்த்தி (29), தனது நண்பா் செல்வமாரியப்பனுடன் புதன்கிழமை இரவு கோவில்பட்டி வேலாயுதபுரம் சாலையில் உள்ள வசந்த நகா் பகுதியில் தண்டவாளம் அருகே மது குடித்தாராம். பின்னா், அவா் தற்படம் எடுத்தாராம். அப்போது, குருவாயூா் விரைவு ரயில் மோதியதில் அவா் காயமடைந்தாா். அவரை செல்வமாரியப்பன் மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தாா்.

இரு விபத்துகள் குறித்தும் தூத்துக்குடி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com