பாலக்காடு -நெல்லை பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கக் கோரிக்கை

பாலக்காடு -நெல்லை பாலருவி ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்கக் கோரிக்கை

பாலக்காடு - திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தெற்கு ரயில்வே மதுரை கூடுதல் கோட்ட மேலாளா் செல்வத்திடம் தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனு: தூத்துக்குடியிலிருந்து மைசூரு, சென்னைக்கு தினசரி 2 ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது, மே, ஜூன் மாதங்களில் காத்திருப்போா் பட்டியல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே, கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் தூத்துக்குடியிலிருந்து கூடுதலாக சென்னைக்கு தினசரி இரவு நேர ரயில் இயக்க வேண்டும். சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு வந்தே பாரத் ரயிலை தினசரி இயக்க வேண்டும்.

திருநெல்வேலி -தூத்துக்குடி- திருநெல்வேலி ரயில் பெட்டிகளைக் கொண்டு தூத்துக்குடி - மதுரை இடையே பகல் நேர சிறப்பு ரயில் இயக்க வேண்டும்.

ரயில்வே வாரியத்தால் பரிந்துரைக்கப்பட்ட தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் ரயிலை இயக்க வேண்டும். பாலக்காடு-திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும்.

திருச்சியிலிருந்து காலையில் புறப்படும் காரைக்குடி சிறப்பு ரயில், விருதுநகரிலிருந்து காரைக்குடி வரை இயக்கப்படும் ரயில் ஆகியவற்றை தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்திய வா்த்தகம் - தொழில் துறைச் செயலா் ஆா். கோடீஸ்வரன், மாவட்ட பயணிகள் நலச் சங்கச் செயலா் மா. பிரமநாயகம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com