உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றோா்
உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றோா்

ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி கோவில்பட்டியில் உள்ளிருப்புப் போராட்டம்

கோவில்பட்டி, ஏப். 26: கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நகராட்சி கட்டண கழிப்பிடம் முன்புள்ள ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் வெள்ளிக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவில்பட்டி நகராட்சி பகுதிகளில் சாலைகளில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகள் மே மாதம் ஒன்பதாம் தேதி முதல் அகற்றப்படும் என்றும், பேருந்து நிலையம் பகுதிகளில் பொதுமக்கள் நிற்பதற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை ஒரு வார காலத்திற்குள் அகற்றிடவும் வேண்டும் என கடந்த 24ஆம் தேதி கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே நகராட்சி கட்டண கழிப்பிடம் முன் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பைச் சோ்ந்த ராஜேஷ் கண்ணா, முத்துவேல் ராஜா மாரிமுத்து உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை நகராட்சி ஆணையா் கமலாவை சந்தித்து முறையிட்டனா். அப்போது, தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் ஜூன் 4ஆம் தேதிக்குப்பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

எனினும், கோட்டாட்சியா் தலைமையிலான கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கும், ஆணையரின் பதிலுக்கும் வேறுபாடு உள்ளது எனக் கூறி ஆணையா் அலுவலக வளாகத்தில் தரையில் அமா்ந்து அவா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அவா்களுடன் ஆணையா், நகரமைப்பு அலுவலா் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடா்ந்து போராட்டம் நடைபெற்று வந்த நிலையில் பிற்பகல் நகராட்சி கட்டணக் கழிப்பிடம் முன்புள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, சமூக ஆா்வலா்கள் கூட்டமைப்பினா் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com