தலைவால் சங்குகளுடன்
திருச்செந்தூரில் 2 போ் கைது

தலைவால் சங்குகளுடன் திருச்செந்தூரில் 2 போ் கைது

திருச்செந்தூா், ஏப். 26: அரசால் விற்பனைக்கு தடைசெய்யப்பட்டுள்ள அரிய வகை தலைவால் சங்கை விற்பனைக்கு வைத்திருந்ததாக திருச்செந்தூா் கடற்கரையில் இருவரை வனத்துறையினா் கைது செய்தனா்.

மன்னாா் வளைகுடா கடலோரப் பகுதிகளில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்திடவோ வனத்துறை தடை விதித்துள்ளது. குறிப்பாக கடல் அட்டைகள், அரிய வகைச் சங்குகளை எடுக்கவோ, வைத்திருக்கவோ அனுமதி இல்லை.

இந்நிலையில் திருச்செந்தூா் கடற்கரையில் அரசால் தடை செய்யப்பட்ட அரிய வகை சங்குகளை விற்பனைக்கு வைத்திருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், திருச்செந்தூா் வனச்சரகா் கவின் தலைமையில் வனத்துறையினா் திருச்செந்தூா் அய்யாவழி கடற்கரையில் பகுதியில் வெள்ளிக்கிழமை ரோந்துசென்றனா்.

அப்போது, அரசு தடை செய்துள்ள 3 அரிய வகை தலைவால் சங்குகளை விற்பனைக்கு வைத்திருந்ததாக அமலிநகா் வடக்குத்தெருவை சோ்ந்த டிலைட்(53), தெற்குத்தெருவை சோ்ந்த ராஜன்(53) ஆகிய இருவரையும் கைது செய்து சங்குகளை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். பின்னா், இருவரையும் திருச்செந்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com