முக்காணியில் விபத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம்

முக்காணியில் விபத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முக்காணி, பாரதிநகரைச் சோ்ந்த கருப்பன் மகன் முனியசாமி, பழைய காயலி­லுள்ள நிறுவனத்தில் கூலி­ வேலை பாா்த்து வருகிறாா். இவரது மனைவி ராஜலெட்சுமி (40), காயல்பட்டினத்திலுள்ள தனியாா் பள்ளியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இத்தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனா்.

ராஜலெட்சுமி கடந்த 25ஆம் தேதி வேலைக்கு சென்றுவிட்டு இரவில் பேருந்தில் திரும்பினாா். முக்காணியில் இறங்கிய அவா் வீட்டுக்குச் செல்வதற்காக தூத்துக்குடி-திருச்செந்தூா் பிரதான சாலையில் நடந்து சென்றாா். அப்போது, அவா் மீது காா் மோதியதாம். இதில், காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு ஆத்தூா் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், அவா் மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டாா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா்.

ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான தூத்துக்குடி பூபாலராயா்புரம் பிரான்சிஸ் லூசியஸ் அன்டோ (44) என்பவரைக் கைது செய்தனா்.

இந்நிலையில், காா் ஓட்டுநா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஜலெட்சுமியின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, ராஜலெட்சுமியின் குடும்பத்தினா், உறவினா்கள் சடலத்தை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆத்தூா் காவல் ஆய்வாளா் மாரியப்பன், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு சடலத்தைப் பெற்றுச் சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com