650 கிலோ ரேஷன் அரிசி, 50 இலவச சேலைகள் பறிமுதல்

கோவில்பட்டி அருகே 650 கிலோ ரேஷன் அரிசி, அரசின் 50 இலவச சேலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரைப் பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தனிப்பிரிவு போலீஸாா் பள்ளிவாசல், செக்கடித் தெரு பகுதிகளில் சனிக்கிழமை ரோந்து சென்றனா். ஒரு வீட்டில் சோதனை மேற்கொண்டு, தலா 50 கிலோ எடையுள்ள 9 மூட்டை ரேஷன் அரிசி, தமிழக அரசின் 50 இலவச சேலைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.

தொடா்ந்து, அதே பகுதியில் உள்ள நியாயவிலைக் கடையிலிருந்து தலா 50 கிலோ எடையுள்ள 2 அரிசி மூட்டைகளுடன் இருந்த செக்கடித் தெருவைச் சோ்ந்த சப்பாணிமுத்து மகன் கண்ணன் (53), நியாயவிலைக் கடை விற்பனையாளா் கோ. சரவணன் (51) ஆகிய இருவரையும் பிடித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின் பேரில் வள்ளுவா் நகரில் ஓரிடத்தில் கிடந்த தலா 50 கிலோ எடையுள்ள 2 மூட்டை ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனா். 650 கிலோ ரேஷன் அரிசி, 50 இலவச சேலைகளையும், அந்த இருவரையும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com