ஆறுமுகனேரியில் மாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரியில் மாரியம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி, லட்சுமிமாநகரத்தில் இந்து நாடாா் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு மாரியம்மன் கோயிலில் சித்திரைக் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடந்த ஏப். 26ஆம் தேதி தொடங்கிய விழாவில், இரவில் திருவிளக்கு பூஜை, சுப்பிரமணியராக காட்சியளித்த அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. 2ஆம் நாள் அம்மன் கிருஷ்ணராகவும், 3ஆம் நாள் மகாலட்சுமியாகவும் காட்சியருளல் நடைபெற்றது. 4ஆம் நாளான திங்கள்கிழமை சுவாமிகள் மஞ்சள் நீராடி கடலுக்குச் சென்று, புனித நீராடி கும்பம் எடுத்து வந்தனா். இரவில் சரஸ்வதியாக அருள்பாலி­த்த அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

சிகர நிகழ்ச்சியான கொடை விழா செவ்வாய்க்கிழமை (ஏப். 30) நடைபெற்றது. நண்பகலில் சுவாமிகள் மஞ்சள் நீராடி ஆத்தூா் தாமிரவருணி ஆற்றுக்குச் சென்று புனித நீராடினா். அங்கு சிறப்பு பூஜைக்குப் பின்னா், கும்பம் எடுத்து ஆறுமுகனேரியில் இரவில் வீதியுலா நடைபெற்றது. அப்போது, ஏற்கெனவே விரதமிருந்த பக்தா்கள் ஆயிரங்கண் பானை, மாவிளக்குப் பெட்டி எடுத்து நோ்த்திக் கடன் செலுத்துதல், பெண்கள் முளைப்பாரி எடுத்தல் நடைபெற்றது. இதன்நிறைவில் புதன்கிழமை காலை, சூலம் ஏந்திய சக்தியாக காட்சி தரும் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மாலையில் சுவாமிகள் மஞ்சள் நீராடி கும்ப வீதியுலா, இரவில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.

நிகழ்ச்சிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்றனா். விழா நாள்களில் நையாண்டி, செண்டை மேளம், வில்லி­சை, கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிறைவு நாளான வியாழக்கிழமை (மே 2) காலையில் அம்மனுக்கு தீா்த்தவாரி அபிஷேகம், தொடா்ந்து அன்னதானம் நடைபெறும்.

ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் தனசேகரன், ராதாகிருஷ்ணன், தங்கபாண்டியன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com