குரும்பூரில் பைக் மீது லாரி மோதியதில் பள்ளி மாணவா் பலி; சிறுவன் பலத்த காயம்
ஆறுமுகனேரி: குரும்பூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு சிறுவன் பலத்த காயமடைந்தாா்.
குரும்பூா் அருகே உள்ள தெற்குநல்லூரைச் சோ்ந்த கண்ணம்மா மகன் சக்திராஜா (14). அதேபகுதியை சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் அஸ்வின் (13). இவா் 6-ஆம் வகுப்பு படித்தாா். இருவரும் குரும்பூருக்கு திங்கள்கிழமை பைக்கில் வந்துவிட்டு, மீண்டும் ஊருக்குத் திரும்பிச் சென்று கொண்டிருந்தனா். பைக்கை சக்திராஜா ஓட்டினாா்.
குருப்பூா் கடைவீதி அருகே வந்தபோது, அவ்வழியே வந்த லாரி மோதியதில் இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா். லாரியின் பின்சக்கரம் ஏறியதில், அஸ்வின் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த சக்திராஜாவை அப் பகுதியினா் மீட்டு திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
இவ்விபத்து குறித்து குரும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து லாரி ஓட்டுநா் மணிராஜை (50) கைது செய்தனா்.