சாத்தான்குளத்தில் தனியாா் பேருந்து சிறை பிடிப்பு

Published on

சாத்தான்குளத்தில் தனியாா் பேருந்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம், நாசரேத் , சாத்தான்குளம் வழியாக பெரியதாழைக்கு தனியாா் பேருந்து இயக்கப்படுகிறது. பல்வேறு கிராமங்கள் வழியாக இயக்கப்பட்டதால், அப் பகுதி மக்களின் போக்குவரத்துக்கு வசதியாக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஓராண்டாக பெரியதாழை வரை செல்வதற்குப் பதிலாக, சாத்தான்குளத்துடன் நிறுத்தப்பட்டது. இதனால், சாத்தான்குளம் - பெரியதாழைக்கு இடைப்பட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் மிகுந்த சிரமம் அடைந்தனா்.

இந்நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தென் மண்டல பொறுப்பாளா் லூா்துமணி தலைமையிலான கிராம மக்கள் 30-க்கும் மேற்பட்டோா் சாத்தான்குளம் பேருந்து நிலையத்தில், அந்த தனியாா் பேருந்தை செவ்வாய்க்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நிா்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் பேருந்தை இயக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதையடுத்து சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். பின்னா் பெரியதாழை வரை பேருந்தை இயக்க உறுதி அளிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com