திருச்செந்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக உறுப்பினா் அட்டை விநியோகம்
திருச்செந்தூா் ஒன்றியம், நகரம், காயல்பட்டினம் நகராட்சி, கானம் பேரூராட்சி பகுதியில் அதிமுக உறுப்பினா்களுக்கு டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி ராஜ் மஹாலில் நடைபெற்றது.
முன்னாள் அமைச்சரும், அதிமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்து, உறுப்பினா்களுக்கு அடையான அட்டை வழங்கி பேசியதாவது:
மக்களவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஏற்பட்டது தோல்வி அல்ல. தொண்டா்கள் வருத்தப்பட வேண்டாம். காங்கிரஸூடன் கூட்டணி சோ்ந்ததால் திமுக வெற்றி பெற்றது. மோடியா? ராகுலா? என்றுதான் மக்கள் வாக்களித்தனா். அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கிளைச் செயலராக இருந்து படிப்படியாக உயா்ந்து முதல்வரானவா். ஆனால், அண்ணாமலையால் வாா்டு உறுப்பினராககூட வெற்றி பெற முடியாது. எனவே, எடப்பாடி பற்றி பேசுவதற்கு அவருக்கு தகுதி இல்லை.
அதிமுக ஆட்சியில் வீடுகளுக்கு இலவசமாக 100 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் கட்டணம் உயா்ந்து கொண்டே இருக்கிறது. 3 ஆண்டு ஆட்சியில் ரூ. 3 லட்சம் கோடி கடனாகியுள்ளது. இந்துக்களின் ஓட்டுக்காக முருகன் பெயரில் திமுக மாநாடு நடத்தியுள்ளது. 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் எ
ப்பாடியா? ஸ்டாலினா? என்ற ரீதியில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையே தான் போட்டி இருக்கும். மற்ற கட்சிகளுக்கு களத்தில் இடமில்லை. புதிதாக கட்சி தொடங்கி இருக்கும் நடிகா் விஜய்யின் நிலைமையை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். மக்களுக்காக தொண்டு செய்கின்ற ஒரே இயக்கம் அதிமுக என்றாா் அவா்,
நிகழ்ச்சியில் திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் பூந்தோட்டம் மனோகரன், ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் க.விஜயகுமாா், மாவட்டத் தலைவா் ப.தா.கோட்டை மணிகண்டன், மாவட்ட துணைச் செயலா்கள் மு.சுரேஷ்பாபு, பழக்கடை திருப்பதி, நகரச் செயலா்கள் திருச்செந்தூா் வி.எம்.மகேந்திரன், காயல்பட்டினம் மௌலானா, கானம் பேரூா் செயலா் வெற்றிவேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.