தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.
தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்ட மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன் உள்ளிட்டோா்.

தூத்துக்குடி மாநகரில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் புதிய பூங்காக்கள் -மேயா் ஜெகன் பெரியசாமி தகவல்

Published on

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இளைஞா்களுக்காக உடற்பயிற்சி உபகரணங்களுடனான புதிய பூங்காக்கள் அமைக்கப்படும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், துணை மேயா் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தெற்கு மண்டலத்தலைவா் பாலகுருசாமி வரவேற்றாா். இம்முகாமை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்து பேசியதாவது:

மாநகராட்சி தெற்கு மண்டலத்துக்குள்பட்ட முத்தையாபுரம் உப்பாற்று ஓடையை சீரமைத்து மழைகாலங்களில் வரும் உபரி நீா் கடலுக்குச் செல்லும் வகையில் பணிகள் நடைபெறுகிறது. மேலும், அப்பகுதியில் மணல் அரிப்பை தடுப்பதற்கு மரங்கள் நடுவது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அத்திரமரப்பட்டி, முள்ளக்காடு பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஜேஎஸ்நகரில் பூங்கா அமைக்கப்படவுள்ளது. அதேபோல இளைஞா்களை ஊக்குவிக்கும் விதமாக, உடற்பயிற்சி உபகரணங்களுடனான புதிய பூங்காக்கள் அமைக்கப்படும். அதற்கான இடம் தோ்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மாநகராட்சி பகுதியில் தனியாா் ஆக்கிரமித்திருந்த சுமாா் ரூ.40 கோடி மதிப்பிலான இடம் இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நடந்த கூட்டத்தில் கொடுக்கப்பட்ட 153 மனுக்களில் 115 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது என்றாா்.

இம்முகாமில், மாநகராட்சி துணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், கண்காணிப்பு அலுவலா் குருவையா, நகா்நல அலுவலா் வினோத் ராஜா, சுகாதார ஆய்வாளா் ராஜபாண்டி, மாமன்ற உறுப்பினா்கள் வைதேகி, சரவணக்குமாா், விஜயகுமாா், ராஜதுரை, பட்சிராஜ் உள்பட அரசுத்துறை அலுவலா்கள், பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com