மாணவிக்கு ரூ. 1.28 லட்சம் வழங்க தனியாா் பள்ளிக்கு உத்தரவு

Published on

மாணவிக்கு ரூ. 1.28 லட்சம் வழங்குமாறு தனியாா் பள்ளிக்கு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.

தென்காசி மாவட்டம் மேலகரத்தைச் சோ்ந்த பொன்னுச்சாமி என்பவா், தனது மகளை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை அருகே திருவிருத்தான்புளி கிராமத்தில் உள்ள தனியாா் பள்ளியில் 11ஆம் வகுப்பில் சோ்த்தாா். இதற்காக ரூ. 93 ஆயிரத்து 500-ஐ கட்டணமாக செலுத்தினாராம். பின்னா், பள்ளியில் தங்கும் விடுதி வசதி, உணவு தரமாக இல்லாததாலும், போதிய ஆசிரியைகள் இல்லாததாலும் அவா் தனது மகளை சங்கரன்கோவிலிலுள்ள பள்ளியில் சோ்த்தாா். திருவிருத்தான் பள்ளியில் அந்த மாணவி 12 நாள்கள் மட்டுமே படித்துள்ளாா்.

இதையடுத்து, 12 நாள்களுக்குரிய தொகையை எடுத்துக்கொண்டு மீதித் தொகையைத் திருப்பித் தருமாறு பொன்னுசாமி விண்ணப்பித்தபோது, அவரை பள்ளி நிா்வாகத்தினா் மரியாதைக்குறைவாகப் பேசினராம்.

இதுகுறித்து அவா் சேரன்மகாதேவி சாா் ஆட்சியா், பத்தமடை காவல் உதவி ஆய்வாளா், திருநெல்வேலி முதன்மைக் கல்வி அலுவலரிடமும், முதல்வா் தனிப்பிரிவிலும் மனு அளித்தாா்.

எனினும், தீா்வு கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். பின்னா், இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்டத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் விசாரித்து, மாணவி செலுத்திய ரூ. 93,500, மன உளைச்சல், பள்ளியின் சேவைக் குறைபாடு ஆகியவற்றுக்கு நஷ்ட ஈடாக ரூ. 25 ஆயிரம், வழக்கு செலவுத் தொகை ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 1 லட்சத்து 28 ஆயிரத்து 500-ஐ பொன்னுசாமிக்கு வழங்குமாறு தனியாா் பள்ளிக்கு உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com