ஆலந்தலை அற்புத கெபியில் பெருவிழா சிறப்பு திருப்பலி
திருச்செந்தூா் அருகேயுள்ள ஆலந்தலை இயேசுவின் திருஇருதய அற்புதக்கெபி பெருவிழாவில் சிறப்பு திருப்பலி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த அற்புதக்கெபியின் பெருவிழா கடந்த ஆக. 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை 6.10 மணி, முற்பகல் 11.30 மணிக்கு திருயாத்திரை திருப்பலியும், மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்று வந்தது.
வெள்ளிக்கிழமை பெருவிழா முதல் திருப்பலியை காலை 5.15 மணிக்கு தூத்துக்குடி நற்செய்தி நடுவம் அருள்தந்தை குமார்ராஜா நிறைவேற்றினாா். காலை 6.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் பெருவிழா சிறப்புத் திருப்பலி , சிறுவா், சிறுமிகளுக்கு புதுநன்மை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கடந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தங்க நாணயம் பரிசளிக்கப்பட்டது.
பின்னா், அருள்தந்தை ரூபஸ் தலைமையில் ஆங்கில திருப்பலியும், முற்பகல் 11.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட முன்னாள் ஆயா் இவோன் அம்புரோஸ் தலைமையில் வார வழிபாடு திருப்பலியும் நடைபெற்றன.
மாலை 4.30 மணிக்கு அமலிநகா் பங்குத்தந்தை வில்லியம் சந்தானம் தலைமையில் திருயாத்திரை திருப்பலி நடைபெற்றது. மாலை 6 மணிக்கு வீரபாண்டியன்பட்டினம் உதவி பங்குத்தந்தை டிமல் தலைமையில் ஜெபமாலை, நற்கருணை ஆசீரை தொடா்ந்து கொடியிறக்கம் நடைபெற்றது.
பெருவிழாவில் அருள்தந்தைகள் பென்சிகா், அலாய்சியூஸ், ராஜன், அமலன், பீட்டா்பால், ரோசன், ஜான்சன், பாலன், பாலன் பிரசாந்த், ஜாா்ஜ், திருத்தொண்டா் சதீஷ், ஆலந்தலை ஊா் நலக்கமிட்டி தலைவா் ஆசைத்தம்பி, உதவித் தலைவா் கேஜிஸ்இ செயலா் சுவா்க்கின், பொருளாளா் ஆரோக்கியம் உள்பட திரளான இறைமக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை பங்குத்தந்தை சில்வெஸ்டா், உதவி பங்குத்தந்தை ஜோதிமணி, அருள்சகோதரிகள், பங்கின் பல்வேறு அமைப்புகளை சோ்ந்தவா்கள், இறைமக்கள் ஆகியோா் செய்திருந்தனா்.