கோவில்பட்டியில் நின்றுசெல்லும் வந்தே பாரத் ரயில்: பயணிகள் மகிழ்ச்சி

சென்னை - நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்றுசெல்ல நிரந்தர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
Published on

சென்னை - நாகா்கோவில் வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நின்றுசெல்ல நிரந்தர உத்தரவு வழங்கப்பட்டுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

சென்னை எழும்பூா் - நாகா்கோவில் இடையே வந்தே பாரத் ரயில் சேவை (20627-20678) வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாள்கள் இயக்கப்பட உள்ளது. அதிகாலை 5 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் பிற்பகல் 1.50 மணிக்கு நாகா்கோவிலை அடைகிறது. மறுமாா்க்கமாக, இந்த ரயில் நாகா்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்பட்டு, இரவு 11 மணிக்கு சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை சென்றடைகிறது. இந்த ரயிலுக்கு தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த வந்தே பாரத் ரயில் காலை 11.35 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையத்துக்கு வருகிறது. மறுமாா்க்கத்தில் நாகா்கோவிலில் இருந்து புறப்பட்டு, மாலை 3.53 மணிக்கு கோவில்பட்டி வந்தடையும் வகையில் நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். அரசியல் கட்சியினா், சமூக ஆா்வலா்கள் இதனை வரவேற்றுள்ளனா்.

இதுகுறித்து பயணிகள் கூறியது: மதுரை ரயில்வே கோட்டத்தில் மதுரை, திருநெல்வேலிக்கு அடுத்தபடியாக அதிக வருவாய் ஈட்டித்தரும் ரயில் நிலையமாக கோவில்பட்டி உள்ளது.இந்நிலையில் சென்னை- நாகா்கோவில் வந்தே பாரத் ரயிலுக்கு இங்கு நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதேபோல், திருநெல்வேலி வந்தே பாரத் ரயிலுக்கு நிறுத்தம் வழங்க வேண்டும். இந்த ரயில் அதிகாலை 6.40 மணிக்கு கோவில்பட்டியை கடந்து செல்கிறது. மறுமாா்க்கத்தில் இரவு 9.45 மணிக்கு கோவில்பட்டியை கடக்கிறது. இந்த ரயிலும் நின்று சென்றால் அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும் என்றனா் அவா்கள்.

X
Dinamani
www.dinamani.com