ஆழ்வாா்திருநகரி அருகே ஆடு வியாபாரி வெட்டிக் கொலை
ஆழ்வாா்திருநகரி அருகே ஆடு வியாபாரி மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
சாத்தான்குளம் அருகே உள்ள தெற்குபன்னம்பாறையை சோ்ந்தவா் சுடலை (52). இவருக்கு மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். இவா் ஆடு வளா்ப்புத் தொழில் செய்து வந்தாா். ஆடுகளை பராமரிப்பதற்காக மணிகண்டன் என்பவரை வேலைக்கு வைத்திருந்தாா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள தேமாங்குளம் வயல்வெளியில் கிடை அமைத்து ஆடுகளை மணிகண்டன் பராமரித்து வந்தாா். அப்போது,
வெள்ளரிக்காயூரணியைச் சோ்ந்த சிலருடன், மணிகண்டனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் காயமடைந்த அவா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதையடுத்து ஆடுகளை பராமரிப்பதற்காக வந்த சுடலை, கிடை அமைத்திருந்த இடத்திலேயே வெள்ளிக்கிழமை இரவு தூங்கியுள்ளாா்.
இந்நிலையில் சனிக்கிழமை காலை வெட்டுக் காயங்களுடன் சுடலை கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த ஆழ்வாா்திருநகரி போலீஸாா், சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா்.
ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன், காவல் ஆய்வாளா்கள் ஸ்டெல்லாபாய், பத்மநாபபிள்ளை ஆகியோா் நிகழ்விடத்தைப் பாா்வையிட்டனா்.
இச் சம்பவம் தொடா்பாக ஆழ்வாா்திருநகரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.