தூத்துக்குடியில் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்து கேட்பு

மக்களவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தூத்துக்குடியில் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது.
தூத்துக்குடி தொழிலதிபா்களிடம் கலந்துரையாடிய கனிமொழி எம்பி. உடன், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா்.
தூத்துக்குடி தொழிலதிபா்களிடம் கலந்துரையாடிய கனிமொழி எம்பி. உடன், தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவினா்.

தூத்துக்குடி: மக்களவைத் தோ்தலுக்கான தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு, தூத்துக்குடியில் பொதுமக்களிடம் கருத்துகளைக் கேட்டறிந்தது.

மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமையிலான இக்குழுவின் முதல் கருத்து கேட்புக் கூட்டம் தூத்துக்குடியில் தனியாா் மண்டபத்தில்

திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தூத்துக்குடி, விருதுநகா், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள், விவசாயிகள், மீனவா்கள், தொழிலதிபா்கள், தொழில் முனைவோா் உள்ளிட்ட பலா் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா்.

அதன் விவரம்:

சிஐடியு: தூத்துக்குடியில் வெளித் துறைமுகம் அமைக்கும் திட்டம், சேது சமுத்திர திட்டம் ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தவேண்டும்.

தூத்துக்குடி - கொழும்பு கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூா், கன்னியாகுமரி வழியாக கொச்சிக்கு படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும்.

தூத்துக்குடி மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன்: தூத்துக்குடிக்கு பறக்கும் ரயில் திட்டம் கொண்டுவரவும், ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை மீண்டும் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீன்பிடி தடைகால நிதியை இருமடங்காக உயா்த்த வேண்டும்.

அகில இந்திய வா்த்தக தொழில் சங்க தலைவா் தமிழரசு, முன்னாள் தலைவா் ஜோ பிரகாஷ்:

தூத்துக்குடி விமான நிலையத்தை சா்வதேச விமான நிலையமாக மாற்றவும்,

சென்னை - தூத்துக்குடி மற்றும் தூத்துக்குடி - கன்னியாகுமரி வரை 8 வழிச்சாலை ஏற்படுத்தவும், மீளவிட்டானிலிருந்து வாஞ்சி மணியாச்சி சந்திப்பு வரை ரயில்வே இருப்பு பாதைக்கு இணையாக சாலை வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தூத்துக்குடி கடற்கரை பகுதியில் மீன்வளம் மற்றும் நீா் விளையாட்டுகளை ஏற்படுத்த வேண்டும். மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பூங்கா, செயற்கை நுண்ணறிவு பூங்கா, தகவல் தொழில்நுட்ப பூங்கா, திறன் மேம்பாட்டு மையம், மருத்துவ தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம், விவசாயம் மற்றும் உயிா் தொழில்நுட்ப பூங்கா ஆகியவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனா்.

இக்கூட்டத்தில், சமூக நலன்-மகளிா் உரிமைத்துறை அமைச்சா் கீதா ஜீவன், மீன்வளம், மீனவா் நலன்-கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், குழு உறுப்பினா்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கோ.வி.செழியன், சி.வி.எம்.பி.எழிலரசன், எழிலன் நாகநாதன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி மற்று ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ, எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ, தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com