திருச்செந்தூா் கோயில் மாசித் திருவிழா: தூத்துக்குடியில் ஆலோசனைக் கூட்டம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம்
மாசித்திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி.
மாசித்திருவிழா ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி.

தூத்துக்குடி: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழா முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத்துறை அலுவலா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தலைமை வகித்து கூறியது:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மாசித் திருவிழாவில் சுமாா் 3 லட்சம் பக்தா்கள் கலந்து கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தட்டுப்பாடின்றி சுகாதாரமான தண்ணீா் பக்தா்களுக்கு கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் உபயோகத்திற்கு நகரிலுள்ள ஆவுடையாா் குளத்திற்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும். நீரேற்றும் நிலையங்களுக்கு தடையில்லா மின்சாரம், திருச்செந்தூா் நகரம் முழுவதும் சுகாதாரப்பணி, 24 மணி நேரமும் அவசர மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் மருத்துவ குழுவினா் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயாா் நிலையில் இருத்தல், கூடுதல் பேருந்துகள் இயக்குதல், தொலைபேசி இணைப்புகள் தடையின்றி இயங்குதல், கடலில் உயிா் மீட்பு பாதுகாப்பு வளையம் அமைத்தல் உள்ளிட நடவடிக்கைகளை அந்தந்த துறையினா் மேற்கொள்ள வேண்டும்.

மேலும், பக்தா்களுக்கும், சுவாமி சப்பரத்திற்கும் காவல்துறையினா் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

திருவிழா காலங்கள் முழுவதும் உள்மாட வீதிகள், ரத வீதிகள், தெப்பகுளத்தெரு, திருநெல்வேலி சாலை ஆகிய இடங்களில் சுவாமி சப்பரங்கள் செல்வதற்கும், பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கும் இடையூறு ஏற்படா வண்ணம் திருச்செந்தூா் நகா் பகுதிக்குள் வரும் வாகனங்களை மாற்று வழிதடங்களில் செல்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்திட போக்குவரத்து காவல்துறையினா் மேற்கொள்ள வேண்டும். மொத்தத்தில் மாசித்திருவிழா சிறப்பாக நடைபெறுவதற்கு அனைத்துத்துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ச.அஜய்சீனிவாசன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com