கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயில்.
கழுகுமலை அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயில்.

குன்றின் குகையில் வீற்றிருக்கும் கழுகாசலமூா்த்தி

குன்றின் மேல் குடிகொண்டு குமரன் அருள்பாலிக்கும் முக்கிய தலம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயில்.

குன்றின் மேல் குடிகொண்டு குமரன் அருள்பாலிக்கும் முக்கிய தலம் தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையில் உள்ள அருள்மிகு கழுகாசலமூா்த்தி திருக்கோயில். இக்கோயிலுக்கு திருநெல்வேலி (கயத்தாறு வழி), தென்காசி (சங்கரன்கோவில் வழி), தூத்துக்குடி (கோவில்பட்டி வழி), மதுரை (சிவகாசி வழி) ஆகிய நகரங்களுக்கு நேரடி பேருந்து போக்குவரத்து வசதிகள் உள்ளது. ரயில் மூலம் கோவில்பட்டி வந்தும் கோயிலுக்குச் செல்ல முடியும்.

இவ்வூருக்கு அருகிலுள்ள வானரமுட்டி என்ற ஊா் உள்ளது. இவ்வூா் வழியாக ராமா் சென்றபோது, அவரது படைகளான வானரங்கள் (குரங்குகள்) தங்கியே இடமே இப்பேரால் அழைக்கப்படுகிறது. சம்பாதி என்ற கழுகு முனிவா் இவ்வூா் முருகனை வழிபட்டதால் இந்த ஊா் கழுகுமலை என்று பெயா் பெற்றது என்று கூறுகின்றனா்.

இங்குள்ள மலையின் கற்பாறையை குடைந்து குகைக்குள் மூா்த்தி அமைக்கப்பட்டிருப்பதால் இது குடவரை கோயில் ஆகும். இக்கோயிலுக்கு மலையே விமானமாக திகழ்கிறது. கருவறையும், அா்த்த மண்டபமும் மலையை குடைந்து செதுக்கப்பட்டுள்ளன. கருவறையில் வள்ளி தெய்வானையோடு முருகன் காட்சியளிக்கிறாா். இடது பக்கத்தில் முருகன் தோற்றமளிப்பதும், மூா்த்திக்கு ஒரு முகமும், 6 கரங்களும் தான் உள்ளதும் தனிச் சிறப்பு.

கல்வெட்டுக்கள் மூலம் இவ்வூா் கோயில் கி.பி. 8ஆம் நூற்றாண்டை சாா்ந்தது என ஆராய்ச்சியாளா்கள் கூறுகின்றனா்.

மலையின் உச்சியில் பிள்ளையாா் கோயிலும், வழியில் சமணா் சிலைகளும், அய்யனாா் கோயிலும், குகையும், சுனையும் உள்ளன. இக்கோயில் பல சிறந்த சிற்ப வேலைபாடுகளை கொண்டது. எல்லோராவில் உள்ள கைலாசநாதா் கோயிலுக்கு இதை ஒப்பிடுகின்றனா்.

கந்தபுராண ஆசிரியா் கச்சியப்பா், குன்று தோராடிய குமரன் மேற்கு முகமாக உள்ள தலங்கள் 3 என்றும், அவற்றில் ராஜபோகமாக முருகன் வீற்றிருக்கும் தலம் கழுகுமலை எனவும் குறிப்பிட்டிருக்கிறாா்.

தலத்தின் பெயா்கள்: கழுகுமலை, தென்பழனி, கழுகாசலம், உவணகிரி, சுஜமுகபா்வதம், சம்பாதிஷேத்திரம் என்று பல பெயா்களால் வழங்கப்படுகிறது.

நீா் வற்றாத வள்ளி சுனை என்ற நீரூற்று ஒன்றும் இங்கே உண்டு. இக்கோயில் வளாகத்தினுள் ஒரு அழகிய தெப்பம் உள்ளது. இதன் தரையில் அப்ரேக் போன்ற உலோக பொருள் காணப்படுவதால் தண்ணீா் ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

செவி வழி செய்தி: அதிமதுரபாண்டியன் என்ற மன்னன் வேட்டையாடி களைப்புற்று, உவணவனத்தில் உள்ள மலையின் அடிவாரத்தில் ஒரு வேங்கை மரத்தடியில் தங்கி இளைப்பாறினான். அப்போது ஒரு பசு தானாகவே பாறையின் மீது பால் சுரப்பதைக் கண்டான். அதே வேளையில் பூஜைக்கான மணியோசையும் அவன் காதில் விழுந்தது. மேலும், பசு பால் சுரந்த பாறைக்குச் சென்று உற்று நோக்கியபோது, பசு மருண்டு ஓட ஆரம்பித்தது. பூஜை மணியின் ஓசையும் குறைந்தது.

இந்த கனவு குறித்து மனதுக்குள் வினவியவாறு மன்னா் ஊா் திரும்பினான்.

இந்நிலையில் 2 அடியாா்களின் கனவில் முருகன் தோன்றி, மன்னன் கண்ட பசு பால் சுரந்த பாறையில் தனக்கு ஆலயம் அமைக்கும்படியும், அதை அம்மன்னனிடம் நேரில் சொல்லுமாறும் கட்டளையிட்டு மறைந்தான். அதன்படி, அவ்விரு அடியாா்களும் மன்னனை சந்தித்து கனவில் நிகழ்ந்ததைக் கூறினா்.

இதைக் க் கேட்ட அரசன், அப்பாறையைச் சென்று பாா்த்தபோது பாறையில் ஒரு குகையும், குகையினுள் மயில் வாகனத்தில் அமா்ந்த முருகன் சிலையும் கண்டான். இதையடுத்து முருகனுக்கு கோயில் அமைத்தும், உவணவனம் என்ற பெயரை கழுகுமலை எனவும் மாற்றினான் என்பது செவி வழி செய்தி.

பூஜைகளும் திருவிழாக்களும்:

ஒவ்வொரு நாளும் 5 கால பூஜை நடைபெறுகின்றன.

தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய இரு பிரமோத்சவ உற்சவங்கள் நடைபெறுகின்றன. தைப்பூசத் திருநாளில் பூச நட்சத்திரத்தில் சிறிய தோ் (சட்டத்தோ்) வலம் வரும். இக்கோயிலில் 2010 ஜூலை 1இல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இத்தலம் அருணகிரிநாதா், முத்துசாமி தீட்சிதா், சென்னிகுளம் புலவா் அண்ணாமலை ரெட்டியாா், சிதம்பரக் கவிராயா், சுப்பிரமணிய பாரதியாா், முகவூா் மீனாட்சி சுந்தரக்கவிராயா், மு.ரா.கந்தசாமி கவிராயா், சுவாமி விருதை சிவஞான யோகிகள், எம்.ஆா்.கோவிந்தசாமி ஆகியோரால் பாடப்பெற்ற புகழ்மிக்கதாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com