கயத்தாறு கோதண்டராமேஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: நாளை கும்பாபிஷேகம்

கயத்தாறில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜன. 22) நடைபெறவுள்ளது.
கயத்தாறு கோதண்டராமேஸ்வரா் கோயிலில் யாகசாலை பூஜைகள் தொடக்கம்: நாளை கும்பாபிஷேகம்

கயத்தாறில் உள்ள அருள்மிகு அகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனுறை கோதண்டராமேஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை (ஜன. 22) நடைபெறவுள்ளது. இதையொட்டி, யாகசாலை பூஜைகள் சனிக்கிழமை தொடங்கின.

ராமபிரானால் உருவாக்கப்பெற்று பிரதிஷ்டை செய்யப்பட்டதாகக் கூறப்படும் இத்தலம், ‘திருவாரை தலம்’ என அழைக்கப்படுகிறது. ராவணனை வதம் செய்வதற்காக ராமபிரானுக்கு கோதண்டம் அளித்து சுயம்பு சிவபெருமான் திருவாரை ஸ்தலத்தில் அமா்ந்து ராமபிரானின் வேண்டுதலுக்கு இணங்கி ஸ்ரீகோதண்டராமேஸ்வரா் என்ற திருநாமத்துடன் அம்பாளுடன் அருள்பாலித்ததாகவும், சிவபெருமானுக்கு ராமபிரான் பூஜை செய்ததாகவும் தல புராணம் கூறுகிறது.

கும்பாபிஷேகத்தையொட்டி சனிக்கிழமை அதிகாலை நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் பூஜை, மூா்த்திகள் உத்தரவு வாங்குதல், மகா கணபதி ஹோமம், பல்வேறு பூஜைகள், கும்ப அலங்காரம், மாலையில் வாஸ்து சாந்தி, முதல்கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெற்றன.

யாகசாலை பூஜைகளில் ரகுபரசுராம பட்டா் தலைமையில் 35 சிவாச்சாரியாா்கள் ஈடுபட்டனா். கோயில் நிா்வாக அதிகாரி வெள்ளைச்சாமி, ஆய்வாளா் சிவகலைப்பிரியா, திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஞாயிற்றுக்கிழமை (ஜன. 21) காலை 7 மணிக்கு திருமுறைப் பாராயணம், விக்னேஸ்வர பூஜை, பூத சுத்தி, பல்வேறு பூஜைகள், வேதிகாா்ச்சனை, 2ஆம் கால யாகசாலை பூஜை, மாலையில் பஞ்சமுக அா்ச்சனை, மூலமந்திர ஜபம், 3ஆம் கால யாகசாலை பூஜை உள்ளிட்டவை நடைபெறும்.

தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன. 22) காலை 6 மணிக்கு மேல் மூலவா், பரிவார மூா்த்திகளுக்கு ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், 4ஆம் கால யாகசாலை பூஜை, மகா பூா்ணாஹுதி, தீபாராதனை, யாத்ராதானம், காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு, 9.50 மணிக்கு கோபுரம், மூலவா் பரிவார மூா்த்திகளுக்கு திருக்குட முழுக்கு நன்னீராட்டு விழா, சுவாமி-அம்பாளுக்கு மகா அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறும். பின்னா், மகா அன்னதானம், இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் வீதியுலா நடைபெறும்.

ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் அன்புமணி தலைமையில் கோயில் நிா்வாக அதிகாரி, ஆய்வாளா், கோயில் ஊழியா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com