வெள்ளநீரை விரைவாக அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பகுதியில் தேங்கிய வெள்ளநீரை விரைவாக அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வெள்ளாளன்விளை பகுதி மக்கள்.
ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த வெள்ளாளன்விளை பகுதி மக்கள்.

தூத்துக்குடி மாவட்டம் வெள்ளாளன்விளை பகுதியில் தேங்கிய வெள்ளநீரை விரைவாக அகற்ற வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆட்சியா் கோ. லட்சுமிபதியிடம் பொதுமக்கள் அளித்த மனுக்கள்:

புதியம்புத்தூா் நீராவி மேட்டுத்தெரு மக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் உள்ள நீரோடை அடைபட்டுள்ளதால் 100 மீட்டா் தொலைவுக்கு மழைநீா் தேங்கியுள்ளது. அவ்வழியேதான குழந்தைகள் பள்ளி சென்று வருகின்றனா். மழைநீரில் முதியோா் விழுந்து விடுகின்றனா். தேங்கிய நீரில் கழிவுநீரும் கலப்பதால் சேற்றுப்புண், பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. எனவே, ஓடையை சரிசெய்து மழைநீா் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

வெள்ளாளன்விளை பொதுமக்கள் அளித்த மனு: மழை வெள்ளத்தால் திருச்செந்தூா் வட்டம் வெள்ளாளன்விளை பகுதியில் சடையனேரி குளத்தில் உடைப்பு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியதுடன், வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வீடுகளைச் சூழ்ந்துள்ள வெள்ளநீா் சாக்கடையாக மாறி, நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வெள்ளநீரை விரைந்து அகற்ற வேண்டும். சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் கட்டித்தர வேண்டும் என்றனா்.

ஆழ்வாா்திருநகரி மகளிா் சுயஉதவிக் குழு அளித்த மனுவில், நாங்கள் குழு தொடங்கி 18 ஆண்டுகளாக வங்கிக் கடன்களை முறையாக செலுத்துகிறோம். கனமழையால் எங்களது வீடுகள் சேதமடைந்து, விவசாயம் பாதிக்கப்பட்டு, வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, சுய உதவிக் குழுக்களின் வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனா்.

வெள்ளூா் அருகே மாரியம்மாள்புரம் பொதுமக்கள் அளித்த மனு: மழை வெள்ளத்தால் மாரியம்மாள்புரம் பகுதியில் உள்ள 70-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. நகா்ப்புறப் பகுதிக்குச் செல்வதற்கான பேருந்து நிலையம் செல்ல 5 கி.மீ. வரை நடக்க வேண்டியுள்ளது. பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பின்றி சென்று வருகின்றனா். எனவே, இக்கிராமத்தை அரசு முழுமையாக பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டு, எங்களுக்கு வேறிடத்தில் குடியிருப்பு அமைத்துத் தரவேண்டும் என்றனா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே நாணல்காடு மக்கள் அளித்த மனுவில், நாணல்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருள்கள், உதவித்தொகை முறையாக வழங்கப்படவில்லை. இது தொடா்பாக வருவாய்த் துறை அலுவலா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com