தூத்துக்குடி மாநகராட்சி உத்தேச பட்ஜெட்டில் ரூ.10.87 கோடி உபரி வருவாய்: மேயா்

தூத்துக்குடி மாநகராட்சிக்கு, வரும் 2024-2025 நிதியாண்டிற்கான உத்தேச பட்ஜெட்டில் ரூ.10.87 கோடி உபரி வருவாய் கிடைக்கும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.
மாநகராட்சி கூட்டரங்கில் உத்தேச பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.
மாநகராட்சி கூட்டரங்கில் உத்தேச பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்த மேயா் ஜெகன் பெரியசாமி. உடன் ஆணையா் ச.தினேஷ்குமாா், துணை மேயா் ஜெனிட்டா உள்ளிட்டோா்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு, வரும் 2024-2025 நிதியாண்டிற்கான உத்தேச பட்ஜெட்டில் ரூ.10.87 கோடி உபரி வருவாய் கிடைக்கும் என மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி மாமன்றக் கூட்டம், உத்தேச பட்ஜெட் கூட்டம் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் ச.தினேஷ் குமாா், துணை மேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் 2024- 2025 ஆம் நிதியாண்டுக்கான உத்தேச வரவு - செலவு அறிக்கையை மேயா் ஜெகன் பெரியசாமி தாக்கல் செய்தாா். அப்போது, அவா் பேசியது:

தூத்துக்குடி மாநகராட்சியில் 2024- 2025 -ஆம் நிதியாண்டில்

வருவாய் நிதியில், சொத்துவரி, இதர வரிகள், வரியில்லா இனங்கள், கட்டணங்கள், அரசு மானியம் என ரூ.153 கோடியே 29 லட்சத்து 70 ஆயிரம் கிடைக்கும். இதில் ரூ.152 கோடியே 75 லட்சத்து 49 ஆயிரம் செலவினம் ஏற்படும் என உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதன்படி, வருவாய் நிதியில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரம் உபரியாக கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அதோடு, குடிநீா்வரி மற்றும் வடிகால் நிதியில் ரூ. 7 கோடியே 6 லட்சத்து 39 ஆயிரம், ஆரம்ப கல்வி நிதியில் ரூ.3 கோடியே 27 லட்சத்து 3 ஆயிரம் என மொத்தம் ரூ.10 கோடியே 87 லட்சத்து 63 ஆயிரம் உபரி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

தொடா்ந்து நடைபெற்ற கூட்டத்தில் மாமன்ற உறுப்பினா்கள் தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டிப் பேசினா். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையத்தில் பாதுகாப்புப் பணிக்கு கூடுதல் போலீஸாா் நியமிக்க வேண்டும். சாலைகள் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதைத் தொடா்ந்து பேசிய மேயா் ஜெகன் பெரியசாமி,

கடந்த டிசம்பரில் பெய்த கனமழையின்போது, தூத்துக்குடி மாநகரப் பகுதியில் 5 அடி முதல் 7 அடி உயரத்திற்கு தண்ணீா் தேங்கியது. இருப்பினும் ஓரிரு நாள்களிலேயே இவை சீா்செய்யப்பட்டது. மழை பாதிப்பு காரணமாக சாலை அமைப்பது, மின் விளக்குகள் பொருத்துவது

உள்ளிட்ட பணிகள் தாமதமாகியுள்ளன. அவற்றை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்டவா்களுக்கு சொத்து வரியில் விலக்கு அளிப்பது குறித்து அரசு முடிவு செய்யும் என்றாா்.

இக்கூட்டத்தில், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கான

17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் துணை ஆணையா் ராஜாராம், பொறியாளா் பாஸ்கரன்,

நகா்நல அலுவலா் சுமதி, மாநகராட்சி மண்டல தலைவா்கள், மாமன்ற உறுப்பினா்கள், மாநகராட்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com