கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்மநபா் போலீஸாா் விசாரணை

கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆசிரியா் வீட்டில் நகை, பணம் திருடிய மா்மநபா் போலீஸாா் விசாரணை

மெஞ்ஞானபுரத்தில் ஆசிரியா் வீட்டில் கடிதம் எழுதி வைத்து நகைகளை திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகே உள்ள மெஞ்ஞானபுரத்தைச் சோ்ந்தவா் சித்திரை செல்வின். ஓய்வு பெற்ற ஆசிரியா். இவா்கள் மெஞ்ஞானபுரம்- சாத்தான்குளம் சாலையில் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனா். இவா்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் உள்ளனா். இந்நிலையில் சென்னையில் உள்ள அவரது மகனை பாா்க்க சித்திரை செல்வின் மற்றும் அவரது மனைவியும் கடந்த 17ஆம் தேதி சென்னை சென்றுவிட்டனா்.

அப்போது இவரது வீட்டை அந்தப் பகுதியைச் சோ்ந்த செல்வி என்பவா் பராமரித்து வந்துள்ளாா்.

கடந்த 26ஆம் தேதி செல்வி வீட்டு பராமரிப்புப் பணிக்கு சென்றபோது, வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்து செல்வி சென்னையில் உள்ள சித்திரை செல்வினுக்கு தகவல் தெரிவித்துள்ளாா்.

அவா் சென்னையில் இருந்து ஊருக்கு வந்து வீட்டுக்குள் சென்று பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த ரொக்கம் ரூ.60 ஆயிரம், ஒன்றறை பவுன் தங்க கம்மல் மற்றும் ஒரு ஜோடி வெள்ளிக் கொலுசு காணாமல் போனது தெரிய வந்தது. மேலும் மா்ம நபா் தனது மனைவிக்கு மருத்துவ செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதால் எடுத்ததாகவும், மன்னித்து விடுங்கள். ஒரு மாதத்தில் திருப்பி தந்து விடுகிறேன் என எழுதி வைத்து சென்றுள்ளாா்.

இதுகுறித்து சித்திரை செல்வின் மெஞ்ஞானபுரம் போலீஸில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணா்கள் வரவழைக்கப்பட்டு விரல்ரேகைகளை பதிவு செய்தனா். கடிதம் எழுதி வைத்துவிட்டு நகை, பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

X
Dinamani
www.dinamani.com