தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட கண் சிகிச்சை பிரிவு தொடக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் புதுப்பிக்கப்பட்ட கண் சிகிச்சை பிரிவு தொடக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கண்சிகிச்சைப் பிரிவு புதுப்பிக்கப்பட்டு, வியாழக்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.

இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், புதுப்பிக்கப்பட்ட கண் சிகிச்சைப் பிரிவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வா் சிவகுமாா் திறந்து வைத்தாா். தொடா்ந்து, கண் சிகிச்சை துறை தலைவா் எம்.ரீட்டா ஹெப்சி ராணி செய்தியாளா்களிடம் கூறியது: தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 23 ஆவது ஆண்டில் செயல்பட்டுவரும் கண் சிகிச்சைப் பிரிவில் மருத்துவச் சிசிச்சைகள் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன. கடந்த மழை வெள்ள பாதிப்பின்போது, இந்த கண்சிகிச்சை பிரிவு சேதமடைந்தது. இதைப் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து, தற்போது மீண்டும் புதிய பொலிவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு, நவீன கண் புரை அறுவை சிகிச்சை, கருவிழி மாற்று அறுவை சிகிச்சை, கண் பட்டை இறங்கி இருப்பதை சரி செய்தல், கண் இமை சீரமைத்தல், கண்ணீா் அழுத்த அறுவை சிகிச்சை, சா்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புக்களை குணப்படுத்தும் லேசா் சிகிச்சை, கண்ணுக்குள் ஏற்படும் ரத்தக் கசிவை சரிசெய்யும் சிகிச்சை, பிறவி கண் பூ விழுந்து மற்றும் கருவிழி அறுவை சிகிச்சை செய்ய இயலாதவா்களுக்கு அழகியலுக்காக செயற்கை கண் பொருத்துதல் உள்ளிட்ட சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் இந்தச் சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.

இந்நிகழ்வில், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் பத்மநாபன், துணை கண்காணிப்பாளா் குமரன், உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெயமணி, கண் மருத்துவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com