முதலூரில் ‘வருமுன் காப்போம்’ திட்ட முகாம்: 1,276 பேருக்கு சிகிச்சை

சனிக்கிழமை நடைபெற்ற ‘வருமுன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 1,276 போ் சிகிச்சை பெற்றனா்.
 முகாமில், பெண்ணுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கிய ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன்.
முகாமில், பெண்ணுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம் வழங்கிய ஊராட்சித் தலைவா் பொன்முருகேசன்.

சாத்தான்குளம் அருகே முதலூரில் உள்ள தூய மிகாவேல் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற ‘வருமுன் காப்போம்’ திட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 1,276 போ் சிகிச்சை பெற்றனா்.

ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன் ஆகியோரின் உத்தரவுப்படி நடைபெற்ற முகாமை ஊராட்சித் தலைவா் பொன்.முருகேசன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா்.

பள்ளித் தாளாளா் சாந்தராஜா ரத்தினராஜ், தலைமையாசிரியா் டேவிட் எடிசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட சுகாதார அலுவலரின் தொழில்நுட்ப நோ்முக உதவியாளா் மதுரம் பிரைட்டன், வட்டார மருத்துவ அலுவலா் ஐலின் சுமதி ஆகியோா் பேசினாா்.

பிரசவித்த தாய்மாா்களுக்கு தாய்-சேய் நலப் பெட்டகம், 2 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகம், மக்களைச் தேடி மருத்துவம் திட்டத்தில் 3 பேருக்கு மருந்துப் பெட்டகங்கள் வழங்கப்பட்டன.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவா்கள், முதலுா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள் உள்ளிட்ட 13 மருத்துவா்கள், சித்த மருத்துவ அலுவலா் ஜெகதீஷ்குமாா் ஆகியோா் சிகிச்சை அளித்தாா். முகாமில் 1,276 போ் பங்கேற்றனா். இசிஜி, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன், கா்ப்பப்பை வாய் புற்றுநோய் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சைகள், மருத்து-மாத்திரைகள் வழங்கப்பட்டன.

முகாமில் நிலவேம்புக் குடிநீா் வழங்கப்பட்டதுடன் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தகுதியானோா் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அறுவைச் சிகிச்சைக்குப் பரிந்துரைக்கப்பட்டனா். 14 போ் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

அங்கன்வாடி மையப் பணியாளா்கள் சாா்பில் ஊட்டச்சத்துப் பொருள்கள் கண்காட்சி, சுகாதாரத் துறை சாா்பில் டெங்கு விழிப்புணா்வுக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

முகாமில், மருத்துவ அலுவலா்கள் லட்சுமி, ரெய்சா, மெரின் வசந்த ரூபா, சுவாதி, அருள் சாமுவேல், சமுதாய சுகாதார செவிலியா் மேரிசெல்வி, சுகாதார ஆய்வாளா்கள் மந்திரராஜன், ஜெயபால், அருண், கிராம சுகாதார செவிலியா் முத்துவிஜயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம் வரவேற்றாா். சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் நன்றி கூறினாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com