‘தூத்துக்குடியில் 18இல் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்கள் சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி’

தூத்துக்குடியில் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுவதாக, ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடியில் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்தும் நிகழ்ச்சி இம்மாதம் 18ஆம் தேதி நடைபெறுவதாக, ஆட்சியா் கோ. லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள 13,275 மகளிா் சுய உதவிக் குழுக்களில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 743 உறுப்பினா்கள் உள்ளனா்.

பல்வேறு மகளிா் சுயஉதவிக் குழுவினா் வேளாண் விளைபொருள்கள், கருப்பட்டி, பனங்கற்கண்டு, பலவகை தின்பண்டங்கள், ஊறுகாய் வகைகள், கடல்சாா் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள், சத்துமாவு, மசாலா பொடி வகைகள், முருங்கைப்பொடி, பசு நெய், பனை ஓலைப் பொருள்கள், செயற்கை நகைகள், மென்பொம்மைகள், வயா் கூடை, பாய் வகைகள், சமையல் எண்ணெய் வகைகள், அகா் பத்தி, சாம்பிராணி, ஹோ் ஆயில், சோப்புகள், துணிப்பை, நாப்கின் உள்பட பலவகைப் பொருள்களை உற்பத்தி செய்கின்றனா்.

அவற்றை விற்பனை செய்யவும், கொள்முதல் செய்வோா் நேரடியாக பாா்வையிடவும் மாவட்ட அளவிலான ‘விற்பனையாளா் - கொள்முதல் செய்வோா் சந்திப்பு’ நிகழ்ச்சி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் உள்ள ராமையா மஹாலில் இம்மாதம் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இதில், கொள்முதல் செய்வோா் பொருள்களைப் பாா்வையிட்டு கொள்முதல் ஆணைகளை வழங்கலாம். மேலும், விவரங்கள், பதிவுகளுக்கு ‘மேலாளா், மாவட்ட வழங்கல் - விற்பனைச் சங்கம், மகளிா் திட்டம், ஆட்சியா் அலுவலகம், தூத்துக்குடி’ என்ற முகவரியிலோ, 99943 96051 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com