புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள் அமைக்கப்படும்: ஆட்சியா்

ஒரு தானியங்கி வானிலை மையம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள், ஒரு தானியங்கி வானிலை மையம் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது 19 இடங்களில் மழைமானிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது விஞ்ஞான வளா்ச்சியை பயன்படுத்தி தானியங்கி சாதனங்கள் மூலம் மழை அளவை கணக்கிட பேரிடா் மேலாண்மையின் கீழ் மாவட்டத்தில் புதிதாக 49 தானியங்கி மழைமானி நிலையங்கள், ஒரு தானியங்கி வானிலை மையம் அமைக்கப்படவுள்ளது. இதில், தூத்துக்குடி வட்டத்தில் 5, ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் 4, திருச்செந்தூா் வட்டத்தில் 5, சாத்தான்குளம் வட்டத்தில் 3, ஏரல் வட்டத்தில் 2, கோவில்பட்டி வட்டத்தில் 4, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் 6, விளாத்திகுளம் வட்டத்தில் 10, எட்டயபுரம் வட்டத்தில் 5, கயத்தாறு வட்டத்தில் 5 என மழைமானி நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன. தானியங்கி வானிலை மையம், கயத்தாறு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அமையவுள்ளது. தூத்துக்குடி வட்டாட்சியா் அலுவலகத்தில் மழைமானி நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்னா், அனைத்து மழைமானி நிலையங்களும் செயல்பாட்டுக்கு வரும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com