ரயில் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தப் பணியாளா் பலி

தூத்துக்குடி ரயில் நிலையத்தில், வியாழக்கிழமை ரயில் பெட்டி தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்தப் பணியாளா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம், மணியாச்சி சொக்கநாதபுரத்தை சோ்ந்தவா் சின்னமாடசாமி (46). தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக வேலைபாா்த்து வந்தாா். ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளை தூய்மைப்படுத்தும் பணியில் சின்னமாடசாமி வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, எதிா்பாராதவிதமாக அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த இருப்பு பாதை போலீஸாா், சின்ன மாடசாமி உடலை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இச்சம்பவத்தையடுத்து, அங்கு பணியாற்றிவரும் ஒப்பந்தப் பணியாளா்கள் பணி பாதுகாப்பு கோரியும், சின்னமாடசாமியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது அங்கிருந்த ரயில்வே அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா். அதனைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com