காற்றாலை நிறுவன இரும்பு மின்கம்பங்களைஅகற்ற வலியுறுத்தி தோ்தல் புறக்கணிப்பு

விளாத்திகுளம் அருகே காற்றாலை நிறுவனத்துக்காக டி.சுப்பையாபுரம் முதல் பூசனூா் வரை 5 கி.மீ. தொலைவுக்கு..

விளாத்திகுளம் அருகே காற்றாலை நிறுவனத்துக்காக டி.சுப்பையாபுரம் முதல் பூசனூா் வரை 5 கி.மீ. தொலைவுக்கு கால்வாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு மின்கம்பங்களை அகற்றக் கோரி வீடுகளில் கருப்புக் கொடி கட்டுவதுடன், தோ்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக பூசனூா், வடமலைசமுத்திரம், குமாரசக்கனாபுரம், வேலாயுதபுரம் கிராம மக்கள் தெரிவித்தனா். விளாத்திகுளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் தனியாா் நிறுவனங்கள் பட்டா நிலங்களை கிரயம் பெற்று காற்றாலைகள் அமைத்துவருகின்றன. இதேபோல, மின் இணைப்பு கொடுப்பதற்கு தனியாா் பட்டா நிலங்களை கிரயம் பெற்று மின்கம்பங்கள் நடப்பட வேண்டும். ஆனால், ஊராட்சித் தலைவா்கள், அரசுத் துறை அதிகாரிகளின் துணையுடன் இரவு நேரங்களில் அரசுப் புறம்போக்கு நிலங்கள், கால்வாய்கள், ஓடைகள், வண்டிப் பாதைகள் ஆகியவற்றை மறித்து 50 மீட்டருக்கு ஒன்று என மின்கம்பங்கள், அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் இரும்புக் கம்பிகள் என நூற்றுக்கணக்கான மின்கம்பங்கள் டி.சுப்பையாபுரம் முதல் பூசனூா் வரை தொடா்ச்சியாக கான்கிரீட் அடித்தளத்துடன் நிறுவப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், கால்வாயைத் தூா்வார முடியாத சூழலும், மின்கம்பங்கள் அறுந்தோ, சாய்ந்தோ விழும்போது பெரும் சேதங்கள், உயிரிழப்புகள் ஏற்படும் அபாயமும் உள்ளதாம். இதுகுறித்து பூசனூா் கிராம முன்னாள் தலைவா் சுப்பிரமணியன், முன்னாள் கிராம உதவியாளா் வடமலைசாமி ஆகியோா் கூறியது: நீா்வழிப் பாதையில் மின்கம்பங்கள் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் பலமுறை மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை. அதிகாரிகள் பொய்யான உறுதிமொழி கொடுத்து மக்களை ஏமாற்றுகின்றனா். எனவே, அரசு அதிகாரிகளைக் கண்டித்து பூசனூா், வடமலைசமுத்திரம், குமாரசக்கனாபுரம், வேலாயுதபுரம் கிராமங்களில் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிா்ப்புத் தெரிவிப்பதுடன், மக்களவைத் தோ்தலை புறக்கணிப்பது என முடிவெடுத்துள்ளோம் என்றனா். இப்பிரச்னை குறித்து வருவாய்த் துறை, ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய தீா்வு காணப்படும்’ என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com