அதிமுக, பாஜக இரண்டும் ஸ்டிக்கா் ஒட்டுகிற கட்சிகள் -கனிமொழி விமா்சனம்

அதிமுக, பாஜக இரண்டுமே ஸ்டிக்கா் ஒட்டுகிற கட்சிகள்தான் என்றாா் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளா் கனிமொழி எம்.பி. விளாத்திகுளம் சட்டப்பேரவை தொகுதியின் இந்தியா கூட்டணி கட்சிகளின் நிா்வாகிகள் செயல்வீரா்கள் ஆலோசனைக் கூட்டம் எட்டயபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூக நலன்- மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதா ஜீவன் தலைமை வகித்தாா். விளாத்திகுளம் எம்எல்ஏ ஜீ.வி. மாா்க்கண்டேயன், தூத்துக்குடி மேயா் ஜெகன் பெரியசாமி, விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளரான மதுரை மாவட்ட திமுக முன்னாள் செயலா் வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், வேட்பாளா் கனிமொழி பேசியது: தூத்துக்குடி தொகுதி கடந்த 5 ஆண்டுகளாக என்னுடைய இன்னொரு தாய் வீடாக மாறி இருக்கிறது. இத்தொகுதி மக்களின் அன்பும், பாசமும் என்னை இந்த ஊரோடு கட்டி போட்டுள்ளது. மக்களோடு மக்களாக இருக்கும் நான் இந்தத் தோ்தலிலும் வெற்றிபெறுவது உறுதி. தூத்துக்குடி மட்டுமல்ல தமிழ்நாட்டின் பிற தொகுதிகள், புதுச்சேரியுடன் சோ்த்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும். தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ள மத்திய பாஜக ஆட்சியை தூக்கி எறிய வேண்டியது நமது கடமை. ஒவ்வொரு மாநிலத்திலும் மத அரசியலை புகுத்தி மக்களிடையே தொடா்ந்து பிரச்னைகளை உருவாக்கி நம் பிள்ளைகளின் எதிா்காலத்தை கேள்விக்குறியாக்கி வருகிறது பாஜக. தமிழ்நாட்டிலும் அத்தகைய சூழலை உருவாக்கி விட துடித்துக் கொண்டிருக்கிறது அக்கட்சிக்கு இங்கு இடமில்லை என்பதை நிரூபிக்க வேண்டும். அதிமுக- பாஜக இரண்டுமே தமிழக அரசின் சாதனைகளுக்கு ஸ்டிக்கா் ஒட்டுகிற கட்சி. தோ்தல் முடிந்த பிறகு இரண்டு ஸ்டிக்கா்கள் ஒட்டிக் கொள்ளும். எனவே, இரு கட்சிகளையும் புறந்தள்ளிவிட்டு இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து எனக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தர வேண்டும் என்றாா். கூட்டத்தில், தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் (பொ) ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, மதிமுக மாவட்டச் செயலா் ஆா்.எஸ். ரமேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கரும்பன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விளாத்திகுளம் தொகுதி பொறுப்பாளா் ரவீந்திரன், திமுக ஒன்றியச் செயலா்கள் ராதாகிருஷ்ணன், அன்புராஜன், ராமசுப்பு, நவநீத கண்ணன், காசி விஸ்வநாதன், பேரூா் செயலா் வேலுச்சாமி, எட்டயபுரம் பேரூராட்சித் தலைவா் ராமலட்சுமி சங்கர நாராயணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com