எட்டயபுரம் அருகே பாலத்தில் காா் மோதல்: பெண் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே பாலத்தில் காா் மோதியதில் பெண் உயிரிழந்தாா்; 3 போ் பலத்த காயமடைந்தனா்.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மாங்கரைக் கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (43). திருச்சியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றிவரும் இவா், செவ்வாய்க்கிழமை இரவு தனது மனைவி உஷா (39), மகன் செந்தூா்நாதன் (6), நண்பரான முசிறியைச் சோ்ந்த காா்த்திக் (35) ஆகியோருடன் திருச்செந்தூருக்கு காரில் புறப்பட்டாா். காரை, காா்த்திக் ஓட்டினாராம்.

புதன்கிழமை அதிகாலை மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சிந்தலக்கரை அருகேயுள்ள பாலத்தின் மீது காா் மோதிக் கவிழ்ந்ததாம். இதில், உஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலின்பேரில், எட்டயபுரம் போலீஸாா் சென்று, காயமடைந்த 3 பேரையும் மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். உஷாவின் சடலம் கூறாய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com