இயந்திர கோளாறால் காா் பழுது:
நுகா்வோருக்கு புதிய காா் வழங்க 
விற்பனையாளருக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

இயந்திர கோளாறால் காா் பழுது: நுகா்வோருக்கு புதிய காா் வழங்க விற்பனையாளருக்கு குறைதீா் ஆணையம் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு சக்கர வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக வாகன உரிமையாளருக்கு புதிய வாகனம் மற்றும் ரூ.1.10 லட்சம் ஆகியவற்றை வாகன விற்பனையாளா் வழங்குமாறு தூத்துக்குடி நுகா்வோா் குறைதீா் ஆணையம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், சாயா்புரத்தைச் சோ்ந்தவா் அருள் லிபின். இவா் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு நான்கு சக்கர வாகன விற்பனையாளரிடம் ஒரு காா் வாங்கியுள்ளாா். பின்னா் அந்த நிறுவனத்திலேயே 4 சா்வீஸ்கள் செய்துள்ளாா். இதில், 4ஆவது சா்வீஸ் செய்த போது வாகனத்தில் குறைந்த அளவு இஞ்சின் ஆயில் ஊற்றப்பட்டதால் இந்தக் காரின் இயந்திரம் முழுமையாக பழுதடைந்ததாகக் கூறப்படுகிறது. காா் வாங்கி ஒரு வருடம் 2 மாதம் மட்டுமே ஆகியுள்ளதால், பழுதான காருக்கு பதிலாக புதிய காா் தருமாறு கேட்டுள்ளாா்.

ஆனால் காா் விற்பனையாளா் அதற்கு சம்மதிக்கவில்லையாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அருள் லிபின், தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணைய தலைவா் திருநீல பிரசாத், உறுப்பினா்கள் ஆ.சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் பழுதான காருக்குப் பதிலாக புதிய காா் மற்றும் சேவை குறைபாடு, மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை ரூ. 1 லட்சம், வழக்கு செலவுத் தொகை ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை வாகன உரிமையாளருக்கு, வாகன விற்பனையாளா் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com