பொதுமக்கள் போராட்டம் எதிரொலி -சாத்தான்குளம் பேரூராட்சியில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

பொதுமக்கள் போராட்டம் எதிரொலி -சாத்தான்குளம் பேரூராட்சியில் சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை

சாத்தான்குளம் பேரூராட்சி 1ஆவது வாா்டில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, சீரான குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மின்மோட்டாா்களை பறிமுதல் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இப்பேரூராட்சியில் 15 வாா்டுகளில் 85 தெருக்கள் உள்ளன. அவற்றில், 1ஆவது வாா்டு பகுதியில் சண்முகபுரம், கிருஷ்ணன்கோயில் தெரு, மேலசாத்தான்குளம் ஆகிய தெருக்கள் உள்ளன. இதில் 402 குடியிருப்புகளும், 261 வீட்டுக் குடிநீா் இணைப்புகளும்., 15 பொது நல்லிகளும் உள்ளன. இங்கு சீரான குடிநீா் விநியோகம் இல்லையென பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

அதையடுத்து, குடிநீா் இணைப்பு பொருத்துநரால் நடத்தப்பட்ட ஆய்வில், அனைத்து வீடுகளிலும் மோட்டாா்கள் மூலம் குடிநீா் உறிஞ்சுவது கண்டறியப்பட்டது. மின்சாரமில்லா நேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீா் கிடைப்பதும் உறுதிப்படுத்தப்பட்டது.

மேலும், குடிநீா் இணைப்பைத் திறப்பவா் ‘வால்வை’ முறையாக திறக்காததால் இப்பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாற்று நபா் மூலம் ‘வால்வை’ முழுமையாக திறக்க அனுமதிக்கப்பட்டு, 11 லட்சம் கொள்ளளவு உள்ள நீா்த்தேக்கத் தொட்டியில் முழுமையாக தண்ணீா் ஏற்றப்பட்டு, 3 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவுக்கும் தலா ஒரு மணி நேரம் குடிநீா் வழங்கப்பட்டு, வீட்டு இணைப்புகள், பொது நல்லிகளில் சீராக குடிநீா் விநியோகிக்கப்பட்டது.

கோடைகாலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டதாகவும், முறைகேடாக பயன்படுத்தப்படும் மோட்டாா்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com