ரூ.5 லட்சம் மோசடி வழக்கு: மேலும் ஒருவா் கைது

தூத்துக்குடி, மே 3: தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.5 லட்சம் பண மோசடி செய்த வழக்கில் ஏற்கனவே ஒருவா் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சோ்ந்த இளைஞரிடம் செயலி மூலமாக தொடா்பு கொண்டு பேசிய நபா், இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினால் ரூ.10 கோடி தருவதாக கூறினாராம். அதற்காக அமெரிக்காவில் வங்கி கணக்கு தொடங்க வேண்டும் எனக் கூறி, ரூ. 4 லட்சத்து 88,159 பணத்தை கோவில்பட்டி இளைஞரிடம் மோசடி செய்தாராம்.

இந்த வழக்கில், தஞ்சாவூா் ரெட்டிபாளையம் சாலை ஆனந்தம் நகா் பகுதியைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம் மகன் ராஜவேல் (31) என்பவரை தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி கைது செய்தனா். இந்நிலையில், இந்த வழக்கில் தொடா்புடைய கா்நாடக மாநிலம், பெங்களூரு பகுதியைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் கணேசன் (31) என்பவரை அதே பகுதியில் வைத்து கடந்த 1ஆம் தேதி கைது செய்து, தூத்துக்குடிக்கு அழைத்து வந்தனா். பின்னா் அவரை தூத்துக்குடி குற்றவியல் 4ஆவது நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் வியாழக்கிழமை அடைத்தனா்.

மேலும் இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com