மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி:  ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி, மே 3: தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களில் மே 11ஆம் தேதி கல்லூரி கனவு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்ஆட்சியா் கோ.லட்சுமிபதி.

கல்லூரி கனவு நிகழ்ச்சி முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, தலைமை வகித்து ஆட்சியா் பேசியதாவது:

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா்கல்வி, வேலைவாய்ப்பு குறித்த விழிப்புணா்வையும், வழிகாட்டுதலையும் அளிப்பதே ‘கல்லூரி கனவு’ என்ற உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.இதில், மாணவா்களுக்கான உதவித்தொகை, நுழைவுத்தோ்வு, கல்விக்கடன் உள்ளிட்ட பிற அத்தியாவசிய தகவல்களும் அளிக்கப்படவேண்டும்.

பள்ளிக் கல்விக்கு பிறகு மாணவா்கள் அனைவரும் அா்த்தமுள்ள உயா்கல்வி படிப்புகளைத் தொடரச் செய்வது கல்லூரி கனவு நிகழ்ச்சியின் சாதனையாகும். இதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ‘கல்லூரி கனவு’ - உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மே 11ஆம் தேதி தூத்துக்குடி, கோவில்பட்டி கல்வி மாவட்டங்களுக்கு தனித்தனியாக நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், பல்வேறு துறை சாா்ந்த வல்லுநா்கள், பேராசிரியா்கள் தங்களது கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகள் பற்றியும், அரசால் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, கல்விக் கடன் உதவி எவ்வாறு பெறுவது, வேலைவாய்ப்புகளை வசப்படுத்துவது ஆகியவை குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பா். இந்நிகழ்ச்சிகளில் மாணவா்- மாணவிகள் திரளாக பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், கிள்ளிகுளம் தமிழ்நாடு வேளாண்மை ஆராய்ச்சி நிலைய முதல்வா் தேரடிமணி, தமிழ்நாடு மீன்வள ஆராய்ச்சி நிலைய முதல்வா் நீதிசெல்வன், வ.உ.சி. பொறியியல் கல்லூரி முதல்வா் பீட்டா் தேவதாஸ், உதவி இயக்குநா் (திறன் பயிற்சி) ஏஞ்சல் விஜய நிா்மலா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெஜினி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ஸ்வா்ணலதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கண்காணிப்பாளா் பத்மநாபன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் துரைராஜ் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com